கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு அதிக கட்டணம் வசூலித்த அரசு, தனியார் பேருந்துகள் மீது அபராதம்

published 1 year ago

கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு அதிக கட்டணம் வசூலித்த அரசு, தனியார் பேருந்துகள் மீது அபராதம்

கோவை: கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து பல ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், ஊட்டிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனால் நகருக்குள் ஏற்படும் நெரிசலை குறைக்கும் நோக்கில் சாய்பாபா கோவில் அருகே கடந்த 2010-ஆம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றால் பயண தூரம் குறையும் என்பதால், புதிய ஸ்டேஜ் உருவாக்கி அதற்கேற்ப கட்டணத்தை குறைக்க வேண்டும் என முந்தைய மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். ஆனால் அந்த உத்தரவுகளை எதிர்த்து தனியார் பஸ் உரிமையாளர்கள் மாநில போக்குவரத்து தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.

தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. தடை ஏதும் விதிக்கப்பட வில்லை. 

இருப்பினும் பேருந்துகளில் கட்டண குறைப்பு அமல்படுத்தப்படுவதை போக்குவரத்து துறையினர் உறுதி செய்யாமல் இருந்து வந்தனர். இதனால் தினசரி மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிப்போர் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணித்து வந்தனர். 

இந்நிலையில் காந்திபுரம்- மேட்டுப்பாயைம் வழித் தடத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கோவை வடக்கு ஆர்.டி.ஓ. சிவகுருநாதன் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

“2018-ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தின்படி கட்டணம் குறைக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறதா என சோதனை செய்தோம். அப்போது புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் பயணிக்க கட்டணமாக ரூ.20-க்கு பதில் ரூ.22 வசூலித்த 2 அரசு பஸ்கள், காந்திபுரம்- மேட்டுப்பாளையம் இடையே ரூ.23-க்கு பதில் ரூ.25 கட்டணம் வசூலித்த 2 தனியார், 4 அரசு பஸ்கள், ரூ.23-க்கு பதில் ரூ.30 வசூலித்த ஒரு அரசு பஸ் என மொத்தம் 9 பஸ்களுக்கு அபராதம் விதிக்க தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்கு அனுமதி வழங்கிய சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.-க்களுக்கு தணிக்கை அறிக்கை அனுப்பப்படும். அவர்கள் அபராதம் விதிப்பார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe