மசானிக் மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு; பெற்றோர் குற்றச்சாட்டு!

published 1 day ago

மசானிக் மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு; பெற்றோர் குற்றச்சாட்டு!

கோவை: கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் மனோஜ் குமார்- புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களக்கு சுமார் 4 மாத ஆண் குழந்தை உள்ளது.  சக்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆண் குழந்தை பிறக்கும் பொழுதே அந்த குழந்தைக்கு ஆசனவாயு முழுமை அடையாமல் பிறந்துள்ளது.

 

எனவே அந்த மருத்துவமனையில் மலக்குடலை மட்டும் வெளியே எடுத்து  தற்காலிகமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். நான்கைந்து மாதங்கள் கழித்து மலக்குடல் ஆசன வாயு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்த நிலையில் குழந்தையின் பெற்றோர்கள் பந்தய சாலை பகுதியில் உள்ள மசானிக் குழந்தைகள் மருத்துவமனையில் (தனியார்) நேற்று முன்தினம் அறுவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு முன்பே குழந்தை உயிரிழந்தது.

இதுகுறித்து குழந்தையின் உறவினர்கள் கூறுகையில், அறுவை சிகிச்சைக்கு முன்பு கொடுக்கப்படும் எனிமா எனும் மருந்தை செவிலியர் ஒருவர் அளவிற்கு அதிகமாக கொடுத்ததாகவும் அப்பொழுதே குழந்தைக்கு வாந்தி வந்ததாகவும் எனவே மருந்தை நிறுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்திய நிலையில் அந்த செவிலியர் நிறுத்தாமல் தொடர்ந்து அந்த எனிமா மருந்தை கொடுத்ததாக தெரிவித்தனர்.

100ml அளவிலான எனிமா மருந்து கொடுக்க மருத்துவரால் அறிவுரை வழங்கப்பட்ட நிலையில் 170 ml  வரைக்கும் குழந்தைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டினர். குழந்தை இறப்பிற்கு முழு காரணமும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கும் அந்த செவிலியரும் தான் என குற்றம் சாட்டிய அவர்கள் அந்த செவிலியரை தங்கள் முன்பு காண்பிக்காமல் இருப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பின்பே குழந்தையின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் கேட்ட பொழுது குழந்தை வேறொரு மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டதாகவும் முழு விவரங்களையும் காவல்துறையினரிடம் தெரிவித்து விட்டதாக கூறினர்.  மேலும் சிகிச்சைக்காக பெற்றோர்கள் செலுத்திய ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தையும் திருப்பிக் கொடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe