கோவையில் குப்பைத்தொட்டியில் மீட்கப்பட்ட கை..! பொதுமக்கள் அதிர்ச்சி

published 2 years ago

கோவையில் குப்பைத்தொட்டியில் மீட்கப்பட்ட கை..! பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை :கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவுப் பகுதியில் குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூரை அடுத்துள்ள வெள்ளக்கிணறு பிரிவு வி.கே.எல் நகர் பகுதியில் இன்று காலை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் வாகனம் மூலம் குப்பைத்தொட்டியிலிருந்து குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது பிளாஸ்டிக் பையிலிருந்து ரத்தம் வழிந்த நிலையில் இரண்டு துண்டுகளான ஆணின் கை கிடந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் உடனடியாக துடியலூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்குக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரிநாத், பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் உள்ளிட்ட காவல்துறையினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து இரண்டு துண்டுகளாகக் கிடந்த அந்தக் கையை ஆய்வு செய்த போது அது 45 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை எனத் தெரிய வந்துள்ளது.

மேற்கொண்டு விசாரணை செய்ய கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் உடலின் மற்ற பாகங்கள் அருகில் ஏதேனும் வீசப்பட்டுள்ளனவா என அருகிலுள்ள குப்பைத்தொட்டிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் தேடி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe