கோவையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் நிலுவை: அடுத்த ஆண்டிற்கான ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல்

published 2 years ago

கோவையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் நிலுவை:  அடுத்த ஆண்டிற்கான ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல்

 

கோவை: நாடு முழுவதும் குடிசைகளை அகற்றிவிட்டு அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கும் வகையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் கடந்த 2015-ஆம் ஆண்டு மத்திய அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. தற்போது ரூ. 2. 77 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த 2020-21-ஆம் நிதியாண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 548 வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், இதுவரை 489 வீடுகளுக்கு மட்டுமே பணியாணை வழங்கப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 59 வீடுகள் கட்டுவதற்குப் பயனாளிகள் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 775 குடிசை வீடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதே வேளையில் மத்திய அரசு 2020-21-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டத் திட்டத்தில் 59 வீடுகளுக்குப் பயனாளிகள் தேர்வு செய்யப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாவட்டத் தேசிய ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கவிதா கூறியதாவது: 
"கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெறப்படும் ஒதுக்கீடுகள் அனைத்தும் அந்த அந்த நிதியாண்டுகளிலே முடிக்கப்படுகிறது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் எந்தெந்த ஊராட்சிகளில் எத்தனை வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற பட்டியலை மத்திய அரசே வழங்குகிறது. அதன்படியே பயனாளிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஒரு சில ஊராட்சிகளில் தகுதியான பயனாளிகள் கிடைப்பதில்லை. இதனால் பணிகளை முடிப்பதில் சிக்கல் நிலவுகிறது. அதன்படிதான் 59 வீடுகள் கட்டுவதற்குப் பயனாளிகள் தேர்வு செய்யப்படாமல் உள்ளது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள ஊராட்சிகளில் பயனாளிகளிடம் பட்டா முக்கிய பிரச்சினையாக உள்ளது. பட்டா இல்லாததால் திட்டத்தில் பயனாளிகளை இணைக்க முடிவதில்லை. இதனை மற்ற ஊராட்சிகளில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கு மாற்ற முடியாது.

எந்த ஊராட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோ அந்த ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். இதனால், 548 வீடுகளில் 59 வீடுகளுக்குப் பயனாளிகள் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. இதுபோல செயல்படுத்த முடியாமல் உள்ள திட்டம் அடுத்தடுத்த ஆண்டு பட்டியலுடன் இணைத்துக் கொள்ளப்படும்." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe