பழனி தைப்பூச திருவிழாவை ஒட்டி தேரோட்டம்: கொட்டும் மழையில் பக்தர்கள் குவிந்தனர்

published 2 years ago

பழனி தைப்பூச திருவிழாவை ஒட்டி தேரோட்டம்: கொட்டும் மழையில் பக்தர்கள் குவிந்தனர்

கோவை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா கடந்த ஜனவரி 29-ஆம் தேதி பெரிய நாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் பழனிக்குச் சென்றனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு ஊர்களிலிருந்து பழனிக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் மலைக்கோவில், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் திரண்டுள்ளதால் கோவிலில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் உச்சபட்ச நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு ரத வீதியில் நடைபெற்றது.

இன்று அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக் காண அலைகடலெனப் பழனியை நோக்கி பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

பழனி கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது. அதில் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். இதனால் தைப்பூச திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் பழனிக்குப் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் வந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்கள் பாதுகாப்புக்காக டி. ஐ. ஜி தலைமையில் 3 எஸ். பி-க்கள், 24 டி. எஸ். பி-க்கள் கொண்ட 3000 காவல்துறையினரைக் கொண்ட குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த தற்காலிக வாகன நிறுதத்ம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து பக்தர்களை அழைத்துவர 30 வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டு மலைக்கோவில் வரை இயக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாத சாரல்மழை மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் பாதயாத்திரை பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இருந்தபோதும் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் கொட்டும் மழையிலும் பழனியை நோக்கி நடந்து சென்றனர்.

இன்று காலையிலும் பழனி மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் விட்டுவிட்டு சாரல்மழை பெய்து வந்தபோதிலும் அதனையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe