கோவையில் பெண்ணின் கழுத்தை அறுத்துக்கொன்ற 2 பேர் கைது

published 1 year ago

கோவையில் பெண்ணின் கழுத்தை அறுத்துக்கொன்ற 2 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் ஏ.மேட்டுப்பாளையம் அருகே உள்ள கரையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், விவசாயி. இவரது மனைவி தங்கமணி (வயது 54). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த இவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து அவரது கணவர் அன்னூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட தங்கமணியின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து அன்னூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை கொன்றவர்கள் யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தங்கமணியை கொன்றதாக எல்லப்பாளையம் பிரிவு சுருக்குமணி கவுண்டன் புதூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளரான கன்னியப்பன் (29), குமரன் காட்டை சேர்ந்த கார்பெண்டர் சுதாகர் என்ற வேங்கை சுதாகர் (30) ஆகியோரை காவல் துறையினர் பிடித்தனர்.

அவர்கள் 2 பேரிடமும் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 2 பேரும் தங்கமணியை கொன்றதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து கன்னியப்பன் காவல் துறையினரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

"நான் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். தங்கமணி எனக்கு உறவினர் ஆவார்.

அவரிடம் நான் கடந்த 2020-ஆம் ஆண்டு தொழில் தேவைக்காக ரூ.5 லட்சம் கடன் பெற்றேன். ஆனால் என்னால் அசலும் வட்டியுமாக முறையாக செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக தங்கமணி அடிக்கடி எனது கடைக்கு வந்து பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தார். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். 

இது குறித்து எனது நண்பரான சுதாகரிடம் கூறினேன். அவரும் கொலை செய்ய சம்மதம் தெரிவித்தார். நேற்று தங்கமணியை கொலை செய்வதற்காக நானும், சுதாகரும் அவரது வீட்டிற்கு சென்றோம். வீட்டில் அவரது கணவர் இருந்தார். பின்னர் அங்கு டீ குடித்து விட்டு திரும்பி வந்துவிட்டோம்.

தொடர்ந்து அவரது கணவர் எப்போது வெளியே செல்வார் என கண்காணித்து வந்தோம். அவர் வெளியே சென்றதும் மதியம் 3 மணியளவில் தங்கமணியின் வீட்டிற்கு சென்றோம். அப்போது அவரிடம் நைசாக பேச்சு கொடுத்து சாப்பாடு கிடைக்குமா என கேட்டோம். அவர் சமையல் அறைக்கு சென்று சாப்பாடு போடுவதற்காக சென்றார். 

அவரை நாங்கள் பின் தொடர்ந்து சென்றோம். பின்னர் மறைத்து வைத்திருந்த கார்பெண்டர் பயன்படுத்தும் உளியால் பணம் கேட்டு தொந்தரவு செய்வாயா என கூறிக்கொண்டே தங்கமணியின் கழுத்து, கண்ணம் ஆகியவற்றில் குத்தினோம். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். பின்னர் உளியால் அவரது கழுத்தை அறுத்தோம். சிறிது நேரத்தில் அவர் துடிதுடித்து இறந்தார்.

பின்னர் கொலைக்கு பயன்படுத்திய உளியை ரோட்டில் வீசி விட்டு தப்பிச் சென்றோம். தலைமறைவாக இருந்த எங்களை காவல் துறையினர் கைது செய்து விட்டனர்." இவ்வாறு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறினார். 

பின்னர் காவல் துறையினர் கன்னியப்பன், சுதாகர் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe