கோவையில் மின்கம்பத்தில் ஏறி அட்டகாசம் செய்த போதை நபர்.

published 1 year ago

கோவையில் மின்கம்பத்தில் ஏறி அட்டகாசம் செய்த போதை  நபர்.

கோவை : கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். பூபதி குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர். 

இவர், மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். முதலில் அந்த பகுதியில் உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டுக்கு சென்றார். வீட்டின் மேற்கூரையில் போடப்பட்டு இருந்த ஓடுகளை பிய்த்து எறிந்து ரகளையில் ஈடுபட்டார். இதை பார்த்து அந்த பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் பூபதியை கண்டித்து அங்கு இருந்து அப்புறப்படுத்தினர். 

அதன் பிறகும் நள்ளிரவு 12 மணியளவில் பூபதியின் தொல்லை அதிகரிக்கவே எரிச்சல் அடைந்த ஒருவர் அவசர போலீஸ் எண் 100-க்கு போன் செய்தார். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர் போதையில் இருந்ததால் போலீசார் எச்சரித்து, வீட்டில் போய் படுக்குமாறு கூறி விட்டு சென்று விட்டனர். போலீசாரைக் கண்டதும் பூபதி வீட்டில் போய் படுத்துக் கொண்டார். போலீசார் சென்ற சில நிமிடங்களில் மீண்டும் பூபதி வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறினார். மரம் ஏறும் தொழிலாளி என்பதால் சர, சரவென மின்கம்பத்தில் ஏறி விட்டார். இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை கீழே இறங்கும்படி கூறி சத்தம் போட்டனர். யார் சொல்வதையும் கேட்காமல் மின் கம்பத்தில் ஏறினார்.

இதைப் பார்த்து பதறிப் போன பொதுமக்கள் உடனே மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக பூபதி தப்பினார். மின்கம்பத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கீழே இறங்க மாட்டேன் என அடம் பிடித்தார்.

மீண்டும்  போலீசாரும் அங்கு வந்தனர். அவர்கள் பூபதியிடம் நைசாக பேசி அவரை கீழே வரச் செய்தனர். அதற்குள் விடிந்து அதிகால 5 மணி ஆகிவிட்டது. பின்னர் பூபதியை பிடித்து தொண்டா முத்தூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று கண்டித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் விடிய, விடிய தூங்காமல் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe