கோவை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் இன்றைய தினம் ஐம்பது லட்சம் கையெழுத்துக்களை பெறும் கையெழுத்து இயக்கம் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தால் துவங்கப்பட்டது. உக்கடம் பகுதியில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத் துவக்க நிகழ்வில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் , மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நீட் விலக்கு சாத்தியம் என்றால் இதுவும் சாத்தியமே என்பதை அடிப்படையாகக் கொண்டு "நமது இலக்கு டாஸ்மாக் விலக்கு" என்ற தலைப்பில் இந்த கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், கையெழுத்து இயக்கம் மூலம் நீட் தேர்வை ஒழிக்க முடியும் என்று சிலர் கூறிவருகிறார்கள் என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீதி வீதியாக மட்டுமில்லாமல் அரசு மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி பள்ளி மாணவர்கள் மத்தியில் தேர்ச்சிக்கான தன்னம்பிக்கையை குறைக்கின்ற வகையில் இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பதாக விமர்சித்தார். 50 லட்சம் கையெழுத்துக்களை வாங்கி நீட்டை ஒழிக்க முடியும் என்றால் அதே 50 லட்சம் கையெழுத்தை இந்து மக்கள் கட்சி வாங்கி மது விலக்கும் சாத்தியப்படும் என்றார். டாஸ்மாக் கடைகளை தமிழகத்தில் மூட வேண்டும் என 50 லட்சம் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை வாங்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவிலேயே மது அருந்துவோர் அதிகமாக இருக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது என தெரிவித்த அவர், சாலை விபத்துகளில் தமிழகம் நம்பர் 1 ஆக திகழ்வதாகவும், குடிகாரர்களில் நம்பர் 1 ஆக திகழ்வதாகவும் லஞ்சம் ஊழலில் நம்பர் 1 ஆக திகழ்வதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவில் நம்பர் 1 ஆக திகழ்வதாகவும் தெரிவித்தார். தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிப்பதற்கு இரண்டு மணி நேரம்தான் அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது சுட்டிக்காட்டிய அவர் பிற மத பண்டிகைகளுக்கு எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லை எனவும் எனவே பட்டாசு வெடிப்பதற்கான அந்த நேர கட்டுப்பாடுகளை தமிழக அரசு நீக்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தீபாவளி தினத்தன்று மதுபான கடைகளை மூட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், பிற மத பண்டிகைகளான புத்தபூர்ணிமா, மகாவீர் ஜெயந்தி, ரம்ஜான், உள்ளிட்ட பண்டிகைகளுக்கு மதுபான கடைகள் மூடப்படுவதாக தெரிவித்தார். ரம்ஜான் பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு இலக்கு வைத்து மது விற்பனை செய்ய முடியுமா என கேள்வி எழுப்பிய அவர் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் இழக்க வைத்து மது விற்பனை செய்வது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் தீபாவளி பண்டிகையை குடிகார பண்டிகையாக மாற்றி விட்டார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வர்த்தகங்களில் அனைத்திலும் ஹலால் முத்திரை பதித்து விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த அவர் ஹலால் முத்திரை பொருள்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
விமான கட்டணத்தின் விலை அளவிற்கு பேருந்து கட்டணம் வந்துள்ளதாக தெரிவித்த அவர் பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஹஜ் பயணத்திற்கு இந்த அரசாங்கம் மானியம் அளிப்பதாகவும் கட்ச தீவில் அந்தோனியார் தேவாலயத்திற்கு செல்வதற்கு இலவசம் என உள்ள நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு மானியம் வழங்கப்பட வேண்டும் எனவும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் தீபாவளி தினத்தன்று சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அண்மையில் பேருந்தில் படிகள் தொங்கியவாறு பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்த சின்னத்திரை நடிகை, ரஞ்சனா நாச்சியார் குறித்து பேசிய அர்ஜுன் சம்பத், பேருந்தில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்ததை தட்டி கட்டதற்கு கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். மேலும் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சிகள் தீபாவளி பண்டிகையை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
திருவண்ணாமலை கோவில் பகுதியில் வர்த்தக கட்டிடம் கட்டப்படுவதற்கு எதிராக அறப்போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!