மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாடுக்கு தான் அதிக பயன்- கோவை வளர்ச்சி பெறும் என வானதி சீனிவாசன் பேட்டி...

published 1 day ago

மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாடுக்கு தான் அதிக பயன்- கோவை வளர்ச்சி பெறும் என வானதி சீனிவாசன் பேட்டி...

கோவை: கோவை மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பு சார்பில் சுயம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா சித்தாபுதூர் பகுதியில் இன்று நடைபெற்றது.

இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு தையல் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் சுயம் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஆயிரம் பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி வழங்கப்பட்டு தையல் இயந்திரங்கள் வழங்கி அவர்களை தொழில் முனைவோராக உருவாக்கி உள்ளதாகவும், இதனால் பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் தொழில் செய்து குடும்பத்தையும் நாட்டையும் மேம்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக மேலும் ஆயிரம் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியோடு இன்று துவங்கியுள்ளதாகவும், மத்திய அரசின் ஜவுளி துறையின் கீழ் சம்ரித் (SAMRIDH) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தினை பின்பற்றி உரிய நிதி உதவியோடு இந்த இலவச பயிற்சி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


பயிற்சி முடித்த பின்னர் இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் எனவும், வசிப்பிடத்திற்கு அருகே இந்த பயிற்சி வழங்கப்படுவதால் பெண்கள் ஆர்வமாக இதில் கலந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தையல் பயிற்சியோடு எம்பிராய்டரி பயிற்சி ஆகியவை கூடுதலாக வழங்கப்பட்டு அவர்களது தொழிலை மேம்படுத்த உதவி செய்து வருவதாகவும், சுய உதவி குழுக்கள் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைப்பதோடு வங்கிகளில் கடன் பெற்று தருவதற்கும் உதவி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளை மாநகராட்சிகளோடு இணைப்பதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்து வருவதாகவும், ஜனவரி 26ஆம் தேதி நடத்தப்படும் கிராம சபை கூட்டங்கள் அவசரகதியில் மக்களின் கருத்துக்களை கேட்காமல் நடத்தப்படுவதாகவும், ஏற்கனவே மாநகராட்சியில் குப்பைகளை ஆற்றுவதற்கும் மற்ற பணிகளுக்கும் ஆள் பற்றாக்குறை இருக்கும்போது ஊராட்சிகளையும் மாநகராட்சியோடு இணைக்கும் பொழுது எந்த சேவையும் சென்றடையாத நிலை உருவாகும் என்பதால் மக்கள் இதனை எதிர்ப்பதாகவும், மத்திய அரசு வழங்கும் நிதி உதவியும் இதனால் தடைபடும் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் பல்வேறு மசோதாக்களை நிறுத்தி வைத்திருக்கும் வழக்கில் நீதிமன்ற கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு யாரும் செயல்படலாம் என தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வருவதாகவும், காவல்துறையினர் மீது எந்த பயமும் இல்லாத நிலை உருவாகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த ஒதுக்கீடும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியவர், மத்திய பட்ஜெட் என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கான பட்ஜெட் எனவும், தனித்தனியான மாநிலங்களுக்கான பட்ஜெட் இல்லை எனவும் விளக்கினார். மேலும் 12 லட்சம் வரையிலான வரி விலக்கு அறிவிப்பால் தமிழக மக்கள் அதிக அளவில் பயனடைவார்கள் எனவும், சிறு குறு நடுத்தர தொழில்களுக்கான கடன் அதிகரிப்பு அறிவிப்பால் தமிழ்நாடு மகாராஷ்டிரா குஜராத் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும் எனவும், குறிப்பாக ராணுவ தளவாட உற்பத்தி மையமாக உருவாகி வரும் கோயம்புத்தூர் போன்ற நகரங்கள் அதிகமாக பயன்பெறும் எனவும் அவர் கூறினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தவெக தலைவர் விஜயின் அறிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், சாதி வாரி கணக்கெடுப்பினை மாநிலங்களே செய்யலாம் எனவும், தமிழக அரசு அதை செய்யாமல் மத்திய அரசின் மீது பிரச்சனைகளை திசைதிருப்பதாகவும் விமர்சித்தார்.

கோவில்களில் பூஜைகள் மேற்கொள்ளும் போது தமிழ் மொழிக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும், தமிழை புறக்கணிக்கக் கூடாது எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியே இல்லாமல் களத்தில் இருந்தாலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பது, மக்களை மந்தைகள் போல் அடைத்து வைக்கும் செயல்களில் திமுகவினர் ஈடுபட்டதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe