வாங்காத கடனை கட்டச் சொல்லி தொல்லை கொடுத்த நிதி நிறுவனத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு...

published 1 year ago

வாங்காத கடனை கட்டச் சொல்லி தொல்லை கொடுத்த நிதி நிறுவனத்திற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு...

கோவை: கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கரீம்(வழக்கறிஞர்). இவர்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஜாஜ் பின்சேர்வ் என்ற நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, சில பொருட்களை வாங்கி அந்தக் கடன் தவணைகளையும் முறையாக செலுத்தி முடித்து, NOC சான்றிதழையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவையில் உள்ள வழக்கறிஞர்களுக்கு ஒரு வங்கி கடன் வழங்கியுள்ளது. அப்போது அப்துல் கரீம் கடன் வாங்க விண்ணப்பித்த நிலையில்  அந்த விண்ணப்பத்தை வங்கி நிராகரித்து, கடன் வழங்க மறுத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி நிர்வாகத்தினரிடம் விசாரித்த போது, பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்தில் ஒரு இலட்ச ரூபாய் தனி நபர் கடனை இவர் வாங்கியுள்ளதாகவும், அந்த கடனை முறையாக செலுத்தாத காரணத்தினால் கடன் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் சிபில் ஸ்கோர் குறைந்து இருப்பதால், இனி எந்த நிறுவனத்திலும் கடன் வாங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். அப்துல் கரீம் கடன் வாங்கவோ, அதற்காகவோ விண்ணப்பிக்கவோ செய்யாத நிலையில், எப்படி தன் பெயரில் கடன் வந்தது என அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்திடம் சென்று அவர் விசாரித்த போது, முறையான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து ஒரு இலட்ச ரூபாய் கடனை செலுத்த கோரி பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்தினர் தொடர்ந்து குறுஞ்செய்திகள் மற்றும் தொலைப்பேசி அழைப்புகள் மூலம் தொல்லை அளித்து வந்துள்ளனர். அப்போது தான் வாங்காத கடனை கட்ட முடியாது என அவர் கூறிய நிலையிலும், அவரது வீட்டிற்கு சென்று கடனை செலுத்துமாறு தொடர்ந்து தொல்லை அளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்துல் கரீம் வாங்காத கடனை கட்டச் சொல்லி மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனத்திற்கு ஒரு இலட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், அதனை அப்துல் கரீமிற்கு வழங்குவதோடு, வழக்கு செலவிற்கு 5 ஆயிரம் ரூபாய் தர வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

பஜாஜ் பின்சேர்வ் நிதி நிறுவனம் அபராத தொகையை உடனடியாக தனக்கு வழங்க வேண்டுமெனவும், இல்லையெனில் நீதிமன்றத்தில் மேல் நடவடிக்கை கோரி வழக்கு தாக்கல் செய்யப்படும் என அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe