கோவையில் அனுமதியின்றி உணவு போட்டி நடத்தினால் போலிஸ் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை...

published 2 weeks ago

கோவையில் அனுமதியின்றி உணவு போட்டி நடத்தினால் போலிஸ் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை...

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல் பராமரிப்பு குறித்தான மாவட்ட அளவிலான ஒரு நாள் முகாம் இன்று நடைபெறுகிறது.

 

இதில் வேளாண் சார்ந்த பல்வேறு கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை கோவை எம்பி கணபதி ராஜ்குமார் துவக்கி வைத்தார். .

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருவதாகவும் அதேசமயம் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்தான கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விவசாய உபகரணங்கள் இயந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் இது குறித்து பல்வேறு உதவிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

விவசாய உபகரணங்கள் வாடகைக்கு கொடுத்து பயன்படுத்தவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இ-வாடகை என்ற பெயரில் விவசாயிகள் உபகரணங்களை வாடகைக்கு பயன்படுத்துவதற்கு தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த செயலி மூலமாக உபகரணங்களை பதிவு செய்து பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்படுத்தி வருவதாக கூறினார். ஒவ்வொரு உபகரணங்களுக்கும் அதற்கு தகுந்தாற்போல்  வாடகை வசூலிக்க இருப்பதாகவும் பெரும்பாலான உபகரணங்கள் ஒரு நாள் முழுவதும் பயன்படாது ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயன்படும் என்பதால் அதற்கான பணத்தை மட்டும் கட்டி விவசாயிகள் அந்த உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார். 
மேலும் தென்னைத் திருவிழா போன்ற விவசாயம் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் கருவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

கோவையில் உணவு நிகழ்ச்சிகளில் உணவின் தரம் போன்றவை குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் கண்காணித்து வருவதாகவும் உணவின் தரம் முறையாக கடைபிடிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறைக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்த அவர் பொது இடங்களில் அனுமதியின்றி உணவு போட்டிகள் நடைபெற்றால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.

முன்னதாக கோவை மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் (எண்: 1962) 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டன.

இது குறித்து பேசிய மண்டல இணை இயக்குனர் திருக்குமரன், கால்நடைகளுக்கு மருத்துவ வசதி எட்டாத கிராமங்களுக்கும் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க இருப்பதாகவும், தற்பொழுது கோவை மாவட்டத்தில் அன்னூர், காரமடை, வடசித்தூர், வேட்டைக்காரன் புதூர், பேரூர் ஆகிய இடங்களில் இந்த வாகனங்கள் செயல்படும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து கிராமங்களுக்கும் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் இந்த வாகனத்தில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் செய்யும் வசதி கூட இருப்பதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe