எங்களை அவர்கள் அழைக்கவில்லை... கோவையில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேட்டி

published 5 months ago

எங்களை அவர்கள் அழைக்கவில்லை... கோவையில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேட்டி

கோவை: கோவை பேரூர் பகுதியில் உள்ள தே.மு.தி.க நிர்வாகி இல்லத் திருமண விழாவிற்கு வந்த மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், கலந்து கொண்டார். 

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகரன், தே.மு.தி.க 20-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து,  அனைத்து தொகுதிகளிலும் சுமார் 3,000 பேருக்கு அன்னதானம் வழங்கினோம். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 14 அன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினோம். 

அதில் 16 குழந்தைகள் ஆண் குழந்தைகள், கேப்டன் மீண்டும் பிறந்து வந்ததாகவே கருதினேன், மகிழ்ச்சியாக இருந்தது.  மேலும் கேப்டன் எப்போதும் எம்மதமும் சம்மதம் என கூறுவார்.  அதன் காரணமாக நேற்று கோவையில் உள்ள மூன்று மத வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தேன்.  அவர்கள் கேப்டனுக்காக பிரார்த்தனையும் செய்தார்கள். கோவை மாவட்டத்தை பொருத்தவரை சில துரோகிகள் கட்சியை விட்டு சென்றாலும்,  தற்போதுள்ள நிர்வாகிகள் நன்றாக வழி நடத்துகிறார்கள். 

அதேபோல் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அண்ணனை சந்தித்தேன்,  அவரும் கட்சியின் செயல்பாடுகள் நன்றாக உள்ளது,  பல்வேறு இடங்களுக்கு நேரில் செல்லுங்கள்,  கட்சி எழுர்ச்சியாக நன்றாக உள்ளது என கூறினார்.  அன்னபூர்ணா விவகாரம் எதிர்க்கட்சிகள் பெரிதாக்குகின்றனர்.  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்,  இதை தேவையற்ற விஷயமாக நான் பார்க்கிறேன்.  அன்னபூர்ணா சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தார்களா என அவர் தான் கூற வேண்டும். 

திருமாவளவன் பதிவு குறித்து பேசும் போது,  அந்த பதிவை அவர்தான் போட்டாரா?  அல்லது அட்மின் போட்டாரா? என தெரியவில்லை. சில நேரங்களில் அட்மின் பதிவு போட்டதாக கூறி முடித்து விடுவார்கள். அதனால் அதற்கு கருத்து சொல்ல தேவை இல்லை. விசிக தலைவர் திருமாவளவன் தொடுவதற்கு முன்னதாகவே தேமுதிக ஏராளமான மதுவிலக்கு போராட்டங்கள்,  மாநாட்டை நடத்தியுள்ளது. 

தற்போது அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது.  தேமுதிக சார்பில் நாங்கள் வரவேற்கிறோம்.  இதுவரை மாநாட்டிற்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை,  வந்தால் அது குறித்து எங்களது தலைமை முடிவு செய்யும். "கோட்" திரைப்படம் நன்றாக இருந்தது. கேப்டன் வரக்கூடிய காட்சிகள் உணர்வு பூர்வமாக இருந்தது. 

த.வெ.க கட்சி மாநாடு நடக்கட்டும்,  அதில் அக்கட்சியின் கொள்கைகள் குறித்து அவர்கள் கூறட்டும், தேர்தலை சந்திக்கட்டும் அதன் பிறகு கூட்டணிகள் தொடர்பாக பேசலாம். மேலும் 20 ஆண்டுகளாக உள்ள கட்சி தேமுதிக, எனவே அவர்களிடம் தான் கூட்டணி சேருவீர்களா என கேட்க வேண்டும்.  நீண்ட நாளுக்கு பிறகு கோவை வருகிறேன். இப்போதும் சாலைகள் குண்டும் குழியுமாக தான் உள்ளது. 

பாலங்கள் கட்டி முடிக்கப்படவில்லை,  தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை,  கள்ளச்சாராயம் என பிரச்சனைகள் உள்ளது. தேவை இல்லாமல் கார் பந்தயம் நடத்தினர்.  இதெல்லாம் விளம்பரத்திற்கான நடவடிக்கையாக பார்க்கிறேன் எனக் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe