தமிழ் மொழியை திமுக அழித்து விட்டது- கோவையில் எச்.ராஜா ஆவேசம்...

published 2 days ago

தமிழ் மொழியை திமுக அழித்து விட்டது- கோவையில் எச்.ராஜா ஆவேசம்...

கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சார்பில் 'நலம் - இலவச மருத்துவ முகாம்' இன்று நடைபெற்றது. இதனை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர்,வானதி சீனிவாசன் அவர்கள் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவராக முக்கிய பொறுப்பில் இருந்த போதும் சட்டமன்ற உறுப்பினராக அவரது தொகுதி மக்களுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். மக்கள் நலன் சார்ந்து எப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவர் இங்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பிரதமர் மோடி அவர்களின் திட்டங்கள் அனைத்தும் மகளிர் மேம்பாட்டை மையமாகக் கொண்டு தான் இருக்கும். தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம் பெண்களின் மானம் காக்கப்பட்டது, இலவச எரிவாயு திட்டத்தின் மூலம் பெண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டது, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பெண்களின் பெயரில் தான் வீடு பதிவு செய்யப்படுகிறது. இதே போன்று வானதி சீனிவாசன் அவர்களும் அவரது தொகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்காகவும் சிறப்பான திட்டங்களை செய்து வருகிறார். அவை அனைத்திற்கும் பாஜக சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவை மாநகரை பொறுத்தவரை மக்களுக்கான அடிப்படை வசதிகள் சார்ந்த பல பிரச்சனைகள் உள்ளன. புதிய சாலை போட்டு முடித்ததும் சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப் பணிகளுக்காக சாலைகள் சேதப்படுத்தப்படுகிறது. இவற்றை சரிசெய்ய வேண்டிய கோவை மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பற்ற நிர்வாகமாக செயல்பட்டு வருகிறது. மிக அதிகமாக வீட்டு வரி வசூலிக்கப்படுகிறது. குடிநீர் வரி, குப்பை வரி, மின்சார கட்டணம், சொத்துவரி என மக்களை கொள்ளையடிக்கும் நிர்வாகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இதே நிலைமைதான் உள்ளது.

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த ஒதுக்கீடும் இல்லை என போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ரயில்வே துறையில் தமிழ்நாட்டிற்கு 6680 கோடி, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகளுக்காக 3800 கோடி மற்றும் பல்வேறு திட்டங்களுக்காக 14,000 கோடி என தமிழகத்திற்காக இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மறைத்து, அதாவது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல முதல்வர் ஸ்டாலின் பட்ஜெட் குறித்த பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்.

நிதி அமைச்சரே நினைத்தாலும் ஒரு மாநிலத்திற்கு அதிகமாகவும் மற்றொரு மாநிலத்திற்கு குறைவாகவும் நிதி பங்கீடு செய்ய முடியாது. வசூலிக்கப்படும் வரி இனங்களிலிருந்து 71 சதவீதம் மீண்டும் மாநிலங்களுக்கு தான் வழங்கப்படுகிறது. வெறும் 29 சதவீதம் தான் மத்திய அரசுக்கு செல்கிறது. அது தான் பாதுகாப்பு துறை, மத்திய அரசு பணியாளர்களுக்கான ஊதியம், பென்ஷன், இதர மத்திய அரசு சேவைகள் ஆகியவைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது.

திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் தொகை இரட்டிப்பாகியுள்ளது. முதலீட்டுக்காக கடன் பெற்றால் அதை வரவேற்கலாம் ஆனால் ஊதாரித்தனமாக, பொருளாதாரம் தெரியாமல் ஆட்சி செய்து கடன் சுமையை திமுக அரசு அதிகரித்து வருகிறது. 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு இலவச திட்டங்களை வழங்கி திமுக அரசு தான் கடன் சுமையை அதிகமாக்க துவங்கியது. இவர்கள் செய்யும் ஊழலை நிறுத்தினாலே மக்களுக்கு பெரும் பயன் கிடைக்கும். அதை செய்யாமல் மத்திய அரசை குறை சொல்வது மக்களுக்கு நல்லதல்ல.

கல்விக்கான நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாநிலத்தின் தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா இருந்தபோது, பி எம் ஸ்ரீ பள்ளி மற்றும் மும்மொழிக் கொள்கை ஆகிய திட்டங்களில் இணைவதாக தெரிவித்தனர். அதில் இணைந்தால்தான் அதற்கான நிதியை வழங்க முடியும். 

மும்மொழி கொள்கை திட்டத்தின் மூலம் தமிழ், ஆங்கிலத்தோடு விருப்பத்தின்படி மலையாளம், தெலுங்கு என எந்த மொழியையும் தேர்வு செய்து படிக்கலாம். இதை ஏன் திமுக அரசு தடுக்கிறது. தமிழகத்தில் தமிழ் மொழிக்கு ஆதரவாக இருப்பது பாரதிய ஜனதா கட்சி தான். 1967 இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் தமிழ் மெல்லச் சாகும் என்ற நிலை உருவாகியது. ஈவேரா தமிழ் மொழி குறித்து கூறிய கருத்துக்களை திமுகவினர் நடைமுறைப்படுத்தி தமிழ் மொழியை அழித்து விட்டனர்.

திருமங்கலம் ஃபார்முலா என்ற ஒன்றை திமுக உருவாக்கி அப்போது நடந்த இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஆனால் பொது தேர்தலில் தோல்வி அடைந்தது. அதேபோல் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் 2026 தேர்தலில் இந்த ஆட்சி வீட்டுக்கு போவதை யாரும் தடுக்க முடியாது" என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe