பஞ்சு விலை ஒரு கிலோ ரூ. 247: பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோவை ஜவுளி தொழில் துறையினர் கோரிக்கை

published 2 years ago

பஞ்சு விலை ஒரு கிலோ ரூ. 247: பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோவை ஜவுளி தொழில் துறையினர் கோரிக்கை

கோவை: விவசாயத்துக்கு அடுத்தபடியாக நாடு முழுவதும் அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்துறை விளங்குகிறது.  இந்திய ஜவுளி தொழில் கட்டமைப்பில் மூன்றில் ஒரு பங்கை தமிழகம் கொண்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற ஜவுளி தொழில் மற்றும் அதன் சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் பஞ்சு விலை ஏற்றத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
356 கிலோ பஞ்சு கொண்ட ஒரு கேண்டி பஞ்சு விலை சமீபத்தில் 95 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து புதிய வரலாறு படைத்தது. இந்த விலை உயர்வு ஒட்டுமொத்த ஜவுளித் தொழில்களையும் முடக்கும் என்ற அபாய நிலை ஏற்பட்ட காரணத்தால் ஜவுளி தொழில்துறையினர் ஒன்றிணைந்து மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து பிரச்சினை குறித்து எடுத்துக் கூறினர்.
இதையடுத்து மத்திய அரசும் உடனடியாக பஞ்சு இறக்குமதிக்கான வரியை செப்டம்பர் 30-ந் தேதி வரை முற்றிலும் நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நாட்டில் உள்ள அனைத்து ஜவுளி தொழில் துறையினர் மத்தியிலும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பஞ்சு விலை குறையத் தொடங்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த தொழில் துறையினருக்கு அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது. காரணம் இன்றும் பஞ்சு விலை ஒரு கேண்டி 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து கோவை டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குநர் ஒருவர் கூறியதாவது:-
"மத்திய அரசு பஞ்சு இறக்குமதிக்கான வரியை முற்றிலும் நீக்கி உள்ளது. இருப்பினும் பஞ்சு விலை குறையவில்லை. இந்தியாவில் பலரும் பஞ்சு விற்பனை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் மிக அதிக அளவு பஞ்சை உள்நாட்டில் பதுக்கி வைத்துள்ளனர். இதன் காரணமாகவே மத்திய அரசு இறக்குமதி வரியை நீக்கியும் பஞ்சு விலை எதிர்பார்த்த அளவு குறையாமல் உள்ளதற்கு முக்கிய காரணமாகும்.
பிரச்சனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய அரசு உடனடியாக இந்தியாவில் பஞ்சு பதுக்கி வைத்து உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர பஞ்சு ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30-ந் தேதி வரை முற்றிலும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இந்தியாவில் தற்போது பதுக்கி வைக்கப்பட்டுள்ள மொத்த பஞ்சும் மார்க்கெட்டுக்கு வந்துவிடும்."  இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe