சின்ன வெங்காயத்தின் விலை அக்டோபரில் கிலோ ரூ.45 முதல் ரூ.50-க்குள் இருக்கும்: வேளாண். பல்கலை. கணிப்பு

published 2 years ago

சின்ன வெங்காயத்தின் விலை அக்டோபரில் கிலோ ரூ.45 முதல் ரூ.50-க்குள் இருக்கும்: வேளாண். பல்கலை. கணிப்பு

 

கோவை: தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை கிலோ ரூ.45 முதல் ரூ.50-க்குள் இருக்குமென்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
"இந்தியாவில் 90 சதவீதம் சின்ன வெங்காயம் உற்பத்தி தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடு அடிப்படையில் 2021-22-ஆம் ஆண்டில் 54 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு 5.66 லட்சம் டன் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது கோவை சந்தைக்குக் கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வரத்து காணப்படுகிறது.

வர்த்தக மூலங்களின்படி புரட்டாசி பட்ட விதைப்புக்கான தேவை, வரும் மாதங்களில் பண்டிகை தேவை அதிகரிப்பால் சின்ன வெங்காயத்தின் விலை ஏற்றத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை முன்னறிவிப்புத் திட்டக் குழுவினர் திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காய விலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டன.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் அக்டோபர் மாதம் இறுதி வரை தரமான சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகத்திலிருந்து வரும் வரத்து மற்றும் பருவமழையைப் பொறுத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe