கோவையில் கோடை மழை எவ்வளவு பெய்யும்..எதிர்பார்ப்பு; வேளாண் பல்கலைக்கழகம் கணிப்பு

published 2 years ago

கோவையில் கோடை மழை எவ்வளவு பெய்யும்..எதிர்பார்ப்பு; வேளாண் பல்கலைக்கழகம் கணிப்பு

 

கோவை : கோவையில் 120லிருந்து 150 மி.மீ., அளவுக்கு கோடை மழை பெய்யுமென்று, வேளாண் பல்கலை கணித்துள்ளதால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.


கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக, குளிரின் தாக்கம் குறைந்து வருகிறது. தற்போது பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை அதிகரித்துள்ளதால், கோடை காலம் மேலும் அதிக வெப்பத்துடன் காணப்படும் என்றும், வறட்சி சற்று அதிகமாக இருக்குமென்றும் வேளாண் பல்கலை கணித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:

கோவையில் குளிர்காலம் முடிந்தது; பகல் நேர வெப்பநிலை 33-35 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேர வெப்பநிலை 19-20 டிகிரி செல்சியஸ் ஆகவும் உள்ளது. வரும் நாட்களில், வெப்பம் மேலும் அதிகரிக்கும்; மார்ச் 15க்கு மேலும், ஏப்.,- மே மாதங்களிலும், கோடை மழை பெய்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. கோவையை பொறுத்தவரை, 120-150 மி.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையும் நன்றாக பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை சராசரியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட பெரிய வாய்ப்புகள் இல்லை.சமீப காலமாக மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

கோவையில், முன்பு 800-900 அடி வரை போர் போடவேண்டிய அவசியம் இருந்தது. சமீபகாலங்களில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, 280- 400 அடி உயரத்தில் நீர் கிடைக்கிறது. மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கவேண்டியது அவசியம். நம் நிலத்தில் விழும் மழைநீர், அதை விட்டு வெளியே போகாத வகையில் அனைத்து வீடுகளிலும் சேமிப்பு முறைகளை கையாளவேண்டும். கோடையில் ஒன்றிரண்டு மழை பெய்தவுடன், விவசாயிகள் கோடை உழவு செய்துகொள்ளவேண்டும். கோடை உழவு செய்வதால் பல்வேறு பலன்கள் உள்ளன.

இவ்வாறு, வேளாண் பல்கலை துணைவேந்தர் தெரிவித்தார்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe