Breaking news : கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல்

published 1 year ago

Breaking news : கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல்

 

கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் ஒருவரின் வீட்டில்  காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில்  இரண்டு கை துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை ராமநாதபுரம் அடுத்த புலியகுளம் மசால் லே-அவுட் பகுதியை  சேர்ந்த பாலு என்பவரது மகன் அயோத்தி ரவி எனும் ரவி. இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணைத் தலைவராக பதவி வகித்து வரும் இவரது வீட்டில் உரிய அனுமதியின்றி துப்பாக்கிகள் வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் கோவை போத்தனூர் சரக உதவி ஆணையர் சதீஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் மசால லே அவுட் பகுதியில் இருக்கக்கூடிய ரவியின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது ரவி வீட்டில் இருந்த நிலையில் அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் அவரது வீட்டின் பீரோவில் இரண்டு கை துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை பறிமுதல் செய்த போலீசார் ரவியிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ரவி பல்வேறு பிரச்சனைகளுக்காக கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததும் அதற்காக துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.

மேலும் இரண்டு கை துப்பாக்கிகள் சென்னையில் உள்ள அவரது நண்பர்கள் மூலம் வாங்கப்பட்டதும் எந்தவித அனுமதியும் பெறாமல் மிரட்டலுக்காக இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்ததும் அம்பலமானது.

போத்தனூர் காவல் நிலையத்தில் வைத்து ரவியிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் அவரை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சென்னையில் யாரிடமிருந்து துப்பாக்கிகள் வாங்கப்பட்டது? வேறு ஏதேனும் கும்பலுடன் ரவிக்கு தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து முன்னனி பிரமுகரின் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe