கோவையில் ரூ.40 கோடியில் பிரம்மாண்ட மல்டி லெவல் பார்க்கிங்: மின்சார இணைப்பு கிடைக்காமல் முடக்கம்..!

published 2 years ago

கோவையில் ரூ.40  கோடியில் பிரம்மாண்ட மல்டி லெவல் பார்க்கிங்: மின்சார இணைப்பு கிடைக்காமல் முடக்கம்..!

 கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/HjISDgAc4xN4oifdJzUxU0

கோவை: கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் ரூ.40.78 கோடி செலவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  ஆனால், கோயம்புத்தூர் மாநகராட்சி அவ்விடத்தைத் திறக்க முடியாமல் திணறி வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "புதிய பார்கிங் கட்டிடத்தில் மின் இணைப்புக்காகக் காத்திருக்கிறோம். மின் இணைப்பைப் பெறுவதற்கு உள்ளூர் திட்டமிடல் ஆணையத்திடம் இருந்து நிறைவுச் சான்றிதழ் தேவைப்படுகிறது.

நிறைவுச் சான்றிதழைப் பெற, அந்த கட்டிடத்தின் வரைபடத்தை வைத்துப் பெறப்பட்ட அனுமதி சான்றிதழ் தேவை. அந்த சான்றிதழ் கோவை மாநகராட்சியிடம் இல்லாததால் நிறைவுச் சான்றிதழைப் பெறுவதில் சிக்கல் இருக்கிறது.

மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டுமானத்தை 2019-ம் ஆண்டு கோவை மாநகராட்சி  மேற்கொண்டது. கட்டுமானம் தொடங்குவதற்கு முன்பே திட்ட அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும், ஆனால் அது பெறப்படவில்லை. தமிழ்நாடு மாநில அரசின்  ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019-இன் படி,  நிறைவு சான்றிதழ் இருந்தால் மட்டுமே டான்ஜெட்கோ (TANGEDCO) மின் இணைப்பை வழங்கும்.

திட்ட அனுமதி பெறாமல், கட்டுமானப் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டதால், திறப்பு விழா தாமதமாகிறது." என்றனர்.

திட்ட அனுமதி கோரி, கோவையில் உள்ள உள்ளூர் திட்ட ஆணையத்தைக் கோவை மாநகராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன் அணுகியது. கோயம்புத்தூர் அலுவலகம், மாநகராட்சியின் விண்ணப்பத்தைச் சென்னையில் உள்ள நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்குனரகத்திற்கு அனுப்பியது. திட்ட அனுமதி கிடைத்ததும், கோவை மாநகராட்சி நிறைவுச் சான்றிதழுக்கும் பின்னர் மின் இணைப்புக்கும் விண்ணப்பிக்கும் என்று கூறப்படுகிறது.

டி.பி சாலையில் வாகனங்களின் நெரிசலைக் குறைக்க, 370 வாகன நிறுத்துமிடங்களுடன், மாநகராட்சி இந்த கட்டிடத்தை அமைத்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,  "கார்ப்பரேஷன் விதிகளைப் பின்பற்றாதது மற்றும் திட்ட அனுமதி, நிறைவுச் சான்றிதழைப் பெறத் தவறியது ஏன்.? ஒரு அரசு நிறுவனத்திற்கு விதிகளைப் பின்பற்றுவது ஏன் கடினமாகவுள்ளது? இந்த கட்டிடம் மட்டுமின்றி, திட்ட அனுமதி பெறாமல் பல அரசு அலுவலகங்களை அந்தந்த துறையினர் கட்டியுள்ளனர்." என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe