கோவை மக்களே வைதேகி அருவிக்கு டூர் போலாமா?

published 1 year ago

கோவை மக்களே வைதேகி அருவிக்கு டூர் போலாமா?

கோவை: கோயம்புத்தூர் மக்கள் சுற்றுலா செல்ல வேண்டும் என்றாலே அண்டை மாவட்டமான நீலகிரியில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரிக்கு செல்லும் நிலையில், அந்த மாவட்டத்திலேயே ஒருநாள் சுற்றுலா சென்று வரும் வகையில் ஏராளமான இடங்கள் உள்ளன. அப்படி ஒரு இடத்தைதான் பார்க்கப்போகிறோம்.

நேற்றைய தினம் சென்னை மக்கள் வார விடுமுறையின்போது ஒருநாள் சுற்றுலா செல்வதற்கு சூப்பரான குளுகுளுவென்ற ஒரு இடத்தை பரிந்துரை செய்திருந்தோம்.

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்றாக கோவை உள்ளது. இன்று பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்பட்டு இருக்கும் நிலையில், இனி வார விடுமுறை நாட்களின்போதுதான் சிறிய ஒருநாள் ட்ரிப்புக்கே மக்களால் செல்ல முடியும். இப்படி பிளான்போடும்போதே ஊட்டி, குன்னூர், கோத்தகிரி போன்ற மலை வாசஸ்தளங்கள்தான் பலரது நினைவுக்கு வரும்.
எத்தனை முறைதான் கோவை மக்கள் ஊட்டிக்கே சென்றுகொண்டு இருப்பார்கள்.

பிற மாவட்ட மக்களுக்கு வேண்டுமானால் ஓகே. கோவை மக்களுக்கு அவை போர் அடித்திருக்க வாய்ப்பு அதிகம். ஒரு சேஞ்சுக்கு கோவைக்கு அருகிலேயே இருக்கும் ஒரு பகுதியைதான் நாம் பார்க்க இருக்கிறோம். அப்படி என்ன பகுதி எங்களுக்கு தெரியாமல் கோவைக்குள் இருக்கிறது என்று கோபித்துக்கொள்ள வேண்டாம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. சிலருக்கு இது தெரிந்திருக்கும். சிலருக்கு தெரிந்திருக்காது. குறிப்பாக கோவையில் படிப்பு, பணி நிமித்தமாக தங்கி இருக்கும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அப்படி என்ன பகுதி என்று கேட்கிறீர்களா? அதான் தலைப்பிலேயே க்ளூ கொடுத்து இருந்தோமே.

ஆம், நாம் இப்போது பார்க்கப்போவது வைதேகி அருவி பற்றிதான். கோவை மாவட்டம் நரசிம்மபுரம் என்ற கிராமத்தில் வைதேகி நீர்வீழ்ச்சி அமைந்து இருக்கிறது. கோவையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து 38 கிமீ தொலைவிலும், கோவை விமான நிலையத்தில் இருந்து 37 கிமீ தொலைவிலும் இது இருக்கிறது.

நகர பரபரப்புகளில் இருந்து விடைபெற்று பசுமையான இயற்கை காட்சிகளையும், காட்டுக்குள் இருந்து வரும் பறவைகளின் கீச்சுக் குரல்களையும், கொட்டும் நீர் வீழ்ச்சியின் சத்தத்தையும் கேட்டு புத்துணர்ச்சி அடைய வேண்டும் என்றால் தாராளமான வைதேகி அருவிக்கு நீங்கள் செல்லலாம்.

காடு வழியாக மலையேற்றம் செய்வது, தூய்மையான மூலிகை நீர் துள்ளிக்குதிக்கும் அருவியில் ஆர அமர குளித்து மகிழ்வதை விரும்புபவர்களுக்கு வைதேகி அருவி நிச்சயம் நல்ல சாய்ஸ்சாக இருக்கும். குறிப்பாக வைதேகி அருவிக்கு செல்லும் பாதை மிகவும் அழகானது. பசுமையான போர்வைக்குள் புகுந்து செல்வதை போன்ற உணர்வை அது ஏற்படுத்தும்.

கோவை மாநகரத்தில் இருந்து புறப்பட்டவுடன் கேட்கத் தொடங்கும் எரிச்சலூட்டும் வாகன ஹாரன் சத்தங்கள், தொழிற்சாலைகளின் இறைச்சல்கள் வைதேகி அருவியை நெருங்கும்போது மங்கி, காதுகளுக்கு இதம் தரும் நீர்வீழ்ச்சியின் ஓசை ஒலிக்கத் தொடங்கும். திரும்பும் திசையெங்கும் கட்டிடங்களையே பார்த்து கடுப்பான உங்கள் கண்களை குளிரவைக்கும் இயற்கை காட்சிகள் அங்கு நிறைந்து இருக்கும்.
அடர்ந்த காடு, உயரத்தில் இருந்து கொட்டும் அருவி, மூக்கை துளைக்கும் மலை மூலிகை வாசனை, காதுகளை மகிழ்விக்கும் பறவைகளின் இசை உங்களுக்கு நிச்சயம் மன நிம்மதியை ஏற்படுத்தும். உலக பரபரப்புகளை ஒருநாள் மறந்து, அருவி நீரில் மிதந்து, இயற்கைக்குள் லயித்து உங்கள் உள்ளங்களை உற்சாகப்படுத்துங்கள்.

நாளை மற்றொரு சுற்றுலா தளத்துடன் சந்திப்போம்.

பின்குறிப்பு: அருவியில் குளிக்கும்போது பாதுகாப்பு மிகவும் முக்கியம். இயற்கை கொடுத்த இந்த அழகிய பகுதியை எதிர்கால தலைமுறையினரும் நம்மைபோல் அனுபவிக்க அங்கு பிளாஸ்டிக் கவர்களை தூக்கிவிசிவிட்டு வருவது, சோப், ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe