கோவை :
கோவை மாநகராட்சி சார்பாக குறுந்தொழில் நிறுவனங்களுக்கு எவ்வித குழப்பமும் இன்றி ஒரே மாதிரியான தொழில்வரியை வகுக்க, குறுந்தொழில் முனைவோர்கள் மாநகராட்சி கமிஷனரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்ப்புறங்களிலும் செயல்படுகின்றன. இதில் கிராமப்புறங்களை சுற்றி சுமார் 325 பெரிய தொழில் நிறுவனங்களும், மாநகராட்சி பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில் நிறுவனங்களும் உள்ளன. கோவையில் உள்ள இத்தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதனிடையே கோவையில் குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களது தொழில்நிறுவனங்களில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர். ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்புசெட் உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள இயந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிப்பார்கள். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இந்த தொழில் நிறுவனங்கள் முற்றிலும் முடங்கி இருந்தன. அதற்கு பின்பு மெல்ல மெல்ல எழ துவங்கின. ஆனால் மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, ஜிஎஸ்டி அதிகாரிகள் கிடுக்குப்பிடி, வங்கி கடன் கெடுபிடி, உற்பத்தி பொருட்கள் விற்பனை சந்தையில் மந்த நிலை, போதுமான ஆர்டர்கள் கிடைக்காதது, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு போதுமான நிதி இல்லாத காரணத்தால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது குறுந்தொழில் முனைவோர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் தொழில்வரி கட்ட வேண்டி நெருக்கடி அளிக்கப்பட்டு வருகிறது. தொழில்வரி எவ்வுளவு கட்ட வேண்டும், எந்த முறை பின்பற்றப்படுகிறது என்கிற எந்த நடைமுறையும் இல்லாமல் குழப்பமான முறையில் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு விதமாக தொழில்வரி கட்ட சொல்வதால் குறுந்தொழில் முனைவோர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
மேலும் தொழில் வரி என்ற பெயரில் நோட்டீஸ் கொடுத்து அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாகவும், இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் சார்பில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:
கோவை மாநகர பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு ஆட்டோமொபைல் மற்றும் பம்புசெட், டெக்ஸ்டைல்ஸ் உள்பட பல்வேறு உதிரிபாகங்கள் ஜாப் ஆர்டகளாகவும், உதிரிபாகங்களாகவும் ஆடர்கள் பெற்று தொழில் புரிந்து வருகின்றனர்.
ஜாப்ஆடர்கள் தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டு முழுவதும் ஆடர்கள் கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையில் மாநகராட்சி பகுதியில் உள்ள குறுந்தொழில் நடத்தி வருகிறவர்களுக்கு ஒவ்வொரு மண்டலங்களில் இருந்து ஒவ்வொரு விதமாக தொழில் வரி கட்ட சொல்லி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் நோட்டீஸ் கொடுத்த தேதியில் இருந்து ஒரு வார காலத்துக்குள் தொழில் வரி கட்டவில்லை என்றால் தொழில்கூடங்கள் சீல் வைக்கப்படும் என்ற அறிவிப்பும் செய்து நிர்பந்திக்கிறார்கள். இதனால் குறுந்தொழில் முனைவோர்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கோவையில் இயங்கி வரும் குறுந்தொழில் கூடங்கள் சுமார் 5 எச்.பி. முதல் 50 எச்.பி. வரை மின் இணைப்பினை பெற்று வாடகை கட்டிடங்களிலும், சிலர் சொந்த இடங்களிலும் தொழில் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி தொழில் வரி முறைப்படுத்துவது சம்மந்தமாக தாங்கள் தொழில் அமைப்புகளை அழைத்து வரிவிதிப்பு சம்மந்தமாக தொழில் அமைப்புகளின் ஆலோசனைகளை கேட்டு தொழில்வரி விதிப்பு சம்மந்தமாக வழிகாட்டியை மாநகராட்சி பகுதியில் அமல் படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மாநகராட்சி பகுதியில் இயங்கும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு அதிகாரிகள் எந்த விதமான நோட்டீஸ் கொடுப்பதும், மேல் நடவடிக்கை எடுப்பதையும் நிறுத்தி வைக்க வேண்டும். குறுந்தொழில்களுக்கு என குறைவான மற்றும் தொழில்முனைவோர்கள் தாங்கும் அளவுக்கு என தொழில்வரியை மாநகராட்சி முழுவதும் உள்ள பகுதிகளுக்கு ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
எங்களது இந்த கோரிக்கைகளை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் இடம் தெரிவித்தோம். அவர் எங்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். மேலும் தொழில்வரி தொடர்பாக தொழில் அமைப்பினரிடம் கலந்து பேச ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். அதுவரை தொழில்வரி தொடர்பாக நெருக்கடி தர வேண்டாம் என அதிகாரிகளை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாக்ஸ்: ஜி.எஸ்.டி.,யால் பெரும்நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பு
ஜி.எஸ்.டி.,யால் குறு, சிறு தொழில்கள் முடங்கி வருகின்றன. இப்பொழுது புதிய பிரச்சினையாக தமிழகத்தை சார்ந்த அதிகாரிகள் ஜிஎஸ்டி பில்லில் உள்ள சிறு, சிறு குறைகளை கண்டறிவதும் அதற்காக பல லட்சங்கள் அபராத விதிப்பதும் தொழில் துறையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அருகாமையில் இருக்கக்கூடிய எடை மெஷின் வெயிட் பார்த்து பில் போடுவதாக சென்றால் கூட இவே பில் போடவில்லை என்று சொல்லி அபராத விதிப்பதும், பில்லில் ஏற்படுகின்ற சின்ன சின்ன எழுத்து பிழைக்கும் கூட அபராத விதிப்பதும், கம்பெனி பகுதியில் அதிகாரிகள் வட்டம் இடுவதும் வாகனங்களை மறித்து அபராதம் விதிப்பு என்று தொடர்ந்து தொழில்களை முடக்கி வருகின்றார்கள். இது ஒருபுறம் இருக்க ஜி.எஸ்.டி.,யால் பெரும் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருள்களை ஸ்டாக் வைப்பது இல்லை. இதன் காரணமாக உற்பத்தியை பெரும்நிறுவனங்கள் பல மடங்குகள் குறைத்துள்ளன. இதனால் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர்கள் வெகுவாக குறைந்துள்ளன என குறுந்தொழில் முனைவோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
___