மணிப்பூரில் நிகழ்ந்த கொடூரம் - வீட்டு வாசலில் இளைஞரின் தலை

published 1 year ago

மணிப்பூரில் நிகழ்ந்த கொடூரம் - வீட்டு வாசலில் இளைஞரின் தலை

இம்பால்: மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து  அதே  சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு அவரது வீட்டு வேலியில் சொருகி வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளன.

மணிப்பூரில் அங்குள்ள மலை பிரதேசங்களில் வாழ்ந்து வரும் சிறுபான்மை மக்களாகிய குக்கி, ஜோ, நாகா உள்ளிட்ட பழங்குடி மக்கள்,  இந்த மலைப்பகுதி மற்றும் அதையொட்டியுள்ள சமவெளி பகுதிகளில் இந்த மக்களை தவிர வேறு யாரும் நிலங்களை வாங்கவோ விற்கவோ முடியாது. இப்படி இருக்கும் நிலையில் அங்கு பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி/மெய்டெய் மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க கோரி  என்று வலியுறுத்தி வந்தனர்.

மைத்தேயி/மெய்டெய் மக்களுக்கு தான் மாநிலத்தில் அதிக அளவுக்கு வாக்குகள் இருக்கிறது. எனவே இதனை கவனித்த பாஜக அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புக்கொண்டது. இதையே தனது தேர்தல் வாக்குறுதியாக வைத்து சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலை சந்தித்தது. எதிர்பார்த்ததை போலவே பாஜக இந்த தேர்தலில் வெற்றியும் பெற்றது. இதனையடுத்து மைத்தேயி/மெய்டெய் மக்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

நீதிமன்றமும் இதற்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் குக்கி உள்ளிட்ட பழங்குடி மக்கள் அதிருப்தியடைந்தனர். மைத்தேயி/மெய்டெய் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் தங்கள் உரிமைகளை இழக்க நேரிடும் என்று விமர்சித்து இப்பழங்குடி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில், இதற்கு எதிராக மைத்தேயி/மெய்டெய் மக்கள் ஊர்வலம் பேரணி நடத்தினர். இது ஒரு கட்டத்தில் மோதலாக வெடித்தது.

மோதலில் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குப்படி 160க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபொல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக 5,889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் சுமார் 36,000 பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், 40 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 20 மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனினும், இப்போது வரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. 300க்கும் மேற்பட்ட முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். 350 தேவாலயங்களும், சுமார் 20 கோயில்களும் பிற வழிபாட்டுத்தலங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கடந்த மே 4ம் தேதி குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வன்முறையாளர்களால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மணிப்பூர் அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் சலசலப்பு ஓய்வதற்குள் மற்றொரு சம்பவத்தின் அதிர்ச்சி வீடியொ வெளியாகியுள்ளது. அதாவது பிஷ்னுபூர் மாவட்டத்தில் குக்கி சமூகத்தை சேர்ந்த டேவிட் எனும் இளைஞனின் தலை துண்டிக்கப்பட்டு, அவரது வீட்டு வாசலில் உள்ள மூங்கி தடுப்பு வேலியில் சொருகப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த 2ம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தங்கள் மக்கள் மீது எம்மாதிரியான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்துவதாக குக்கி மக்கள் கூறியுள்ளனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe