கோவை: தமிழகத்தில் 6 ஆயிரம் பேர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என்று தமிழ்நாடு உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் (டிரான்ஸ்டன்) உறுப்பினர் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு உறுப்புமாற்று அறுவை சிகிச்சை ஆணையம் சார்பில் உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்.என். ஆர் கலையரங்கத்தில் நடைபெற்றது.
எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லஷ்மி ராயணசுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு உடல் உறுப்பு தானம் செய்வதன் அவசியம் குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "இந்த காலகட்டத்தில் உடல் உறுப்புகள் செயலிழப்பது அதிகமாகிவிட்டது. சிறு நீரக கோளாறுகளும் செயலிழப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. கேன்சர், ஹைபர் டென்சன், இருதய கோளாறுகள், சர்க்கரை வியாதி உள்ளிட்ட நோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்கள் நம்மை பயமுறுத்தி வருகின்றன. நான் மாணவனாக இருந்த போது இத்தகைய நோய்கள் பணக்காரர்களுக்கு மட்டும் வரும் நோயாக இருந்தது. இப்போது கிராமப்புறங்கள் தொடங்கி அனைத்து பகுதி மக்களும் இவ்வகை நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் தான் சர்க்கரை வியாதி உள்ள நபர்கள் அதிகமாக உள்ளனர். நாம் நமது வாழ்கை முறையில் ஏற்பட்டுள்ள முன்னோற்றத்தை பக்குவமாக கையாள்வதில்லை. சமச்சீரான சரிவிகித உணவை நாம் எடுத்துக் கொள்வதில்லை. தீய பழக்கங்களும் நம்மிடம் சேர்ந்துவிட்டன. 1.5 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் உடல் உறுப்புகள் செயலிழந்து வருவோர்க்கு சிகிச்சையை மேற்கொள்வது கடினம்.
ஒவ்வொரு ஆண்டும் உட்சபட வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சிறுநீரகம் உட்பட உடல் உறுப்புகள் செயலிழந்து போவதுண்டு. காற்றுமாசுபாடும் அதிகரித்து வருகிறது. ரசாயனங்கள் நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது. விவசாயத்தில் ரசானங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. என்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
தற்போது உடல் உறுப்புகள் தானம் செய்ய முன்வருவோர் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அதே நேரத்தில் தானமாக கொடுக்க முன்வோர் உடல் தகுதி சரியாக இருப்பதில்லை. இதனால் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது.
ஒரிவரிடம் கிடைக்கும் தானம் மூலமாக 7 முதல் 8 பேர் பயனடைகின்றனர். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக உள்ளது. சமீபத்தில் இதற்கான சான்றிதழை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளோம்.
தமிழகத்தில் 13 தனியார் மருத்துவமனைகளிலும், 27 அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் மற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இதனால் தமிழகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடியாக உள்ளது.
உலகில் ஸ்பெயின் நாடு தான் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடியாக உள்ளது. தற்போது தமிழகத்தில் 6 ஆயிரம் பேர் சிறு நீரகத்திற்காகவும், கல்லீரலுக்காக 750 முதல் 850 பேரும் காத்திருக்கின்றனர். இவை தவிர இருதயம், கணயம், சிறுகுடல் தேவைப்படுவோரும் உள்ளனர்.
மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை பெறுவதற்கு சட்டதிட்டங்கள் மிக தெளிவாக வரையறுக்கப்படுள்ளன. தமிழ்நாடு உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் மேற்பார்வையில், மருத்துவ குழுவினரிடம் இருந்து இரண்டு மருத்துவ குழுவினர் 6 மணி நேர இடைவெளியில் சான்றிதழ்கள் பெற்ற பிறகே உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது. உறுப்புகள் வேண்டி பதிவு செய்தவர்கள் வரிசையாக உறுப்புகள் தானமாக வழங்கப்படுகின்றன. என்றார்.
மூளைச்சாவு அடைபவர்கள் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு, கடந்த காலங்களில் மூளைச்சாவு கண்டறியப்படாமல் இருந்தது. தற்போது அதிக அளவில் கண்டறியப்படுகிறது. இது தான் மூளைச்சாவு அடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக தோன்றுவதற்கான காரணமாக உள்ளது. மருத்துவ குழுவினர் ஆய்வுக்கு பிறகு உறுப்பு தானம் நடப்பதால் இதில் எவ்வித தவறுகளுக்கும் இடம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!