இது ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி அல்ல - கோவையில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு

published 1 year ago

இது ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி அல்ல - கோவையில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு

கோவை: இந்த ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி அல்ல ஆன்மீகவாதிகளை இருகரம் கொண்டு அரவணைக்கின்ற ஆட்சி என்று கோவையில் அமைச்சர் சேகர்பாபு உரையாற்றினார்.

கோவை பேரூர் பகுதியில் நடைபெற்ற வரும் நொய்யல் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். இந்நிகழ்வில் விழா பேருரை ஆற்றிய அமைச்சர்,

நாட்டு நலன் மீது அக்கறை கொண்ட ஆதீனம் பேரூர் ஆதீனம் என்றால் அது மிகையாகாது என்பது என்னுடைய கருத்து எனவும், எளிமையான முறையில் இறைவனை வழிபடுவது இவர்களது தொண்டு எனவும் தெரிவித்தார்.  

அன்னை தமிழில் குடமுழுக்கு என்றால் வரவேற்கின்றோம், அன்னை தமிழில் அர்ச்சனை என்றால் வரவேற்கின்றோம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா நாங்கள் வரவேற்கின்றோம், தமிழை வாழவைக்கின்ற சன்னிதானம் உண்டென்றால் பேரூர் சன்னிதானம் என்று கூறினால் அது மிகையாகாது எனவும் கூறினார்.

மடங்கள் என்பவை சமய பணியோடு நின்று விடாமல் சமுதாயப் பணிகள் மேற்கொள்கின்ற உதாரண புருஷனாக திகழ்பவர் பேரூர் சாமி என்றால் மிகை ஆகாது என்றும் புகழ்ந்தார். இந்நிகழ்ச்சி நொய்யல் ஆற்றை காப்பாற்றுகின்ற நிகழ்ச்சியோடு மட்டுமில்லாமல், தண்ணீர் என்பது மனிதனின் உயிரோடு கலந்த ஒன்று, நீரின்றி அமையாது உலகு என்ற மாணிக்க வரிகளுக்கு ஏற்ப நதிநீரைக் காப்பாற்ற புறப்பட்டிருக்கும் பேரூர் ஆதீனத்தின் இப்பணி சிறப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.  

மடங்கள் வெறும் வழிபாடு நடத்துகின்ற இடங்களோடு மட்டும் அல்லாமல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பாதுகாக்கின்ற இடமாக விளங்குகின்றன என தெரிவித்தார். இறைவன் இயற்கை மயமானவர் என்பதால் இயற்கையை சார்ந்த பாதுகாப்புகளில் ஆதீனங்களின் சேவையில் இந்த நொய்யல் நீர் நதி பாதுகாப்பும் ஒன்றாக அமைந்துள்ளது.

அகழி, ஆறு, ஊற்று, ஏறி, நீரோடை என பல வடிவத்தில் ஓடும் நீர் நிலைகளை பாதுகாப்பது நமது ஒவ்வொருவருடைய கடமை என குறிப்பிட்ட அவர், இயற்கையை மனிதன் காப்பாற்றினால் இயற்கை வளங்கள் மனிதனை காப்பாற்றும் என்றும் இது ஒரு உலகப் பொதுமறை நியதி என்றும் கூறினார். நொய்யல் ஆற்றின் மேம்பாட்டை ஆதீனங்கள் பலரும் இணைந்து உலக மக்களுக்கு உணர்த்துகின்ற நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்துள்ளது என்பதாக நான் கருதுகிறேன் என தெரிவித்தார்.

மேலும் அறநிலையத்துறை சார்பில் ஒரு லட்சம் தல மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கின்றோம் என்றும் அதோடு மட்டுமல்லாமல் இத்துறையின் சார்பில் 176 குளங்கள் 78 கோடி ரூபாய் செலவில் தூர்வாரியா ஆட்சி இந்த ஆட்சி என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் கூறினார்.

இந்த ஆட்சியில் 5135 கோடி பெருமானம் உள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் ஒரு ஆட்சி சுபிட்சமாகவும் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கியும் கொண்டிருக்கிறது என்றால் ஒரு ஆட்சியை அன்பர்களுக்கு நல்லாட்சியாக  இருக்கிறது என்றால் அந்த ஆட்சியில் திருவிழாக்கள் நடைபெற வேண்டும்.

அந்த ஆட்சியில் குடமுழுக்குகள் நடைபெற வேண்டும் என கூறிய அவர் அந்த வகையில் தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு இதுவரை 922 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்ற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்றார்.

ஆதீனங்கள் ஆட்சியாளர்களை தேடிச் சென்ற காலம் உண்டு,  ஆட்சியாளர்கள் ஆதீனங்களை தேடி வருகின்ற காலம் இந்த காலம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார். மேலும் இது ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி அல்ல  ஆன்மீகவாதிகளை இருகரம் கொண்டு அரவணைக்கின்ற ஆட்சி இந்த ஆட்சி என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe