பாஜகவை சவக்குழிக்குள் அனுப்புவதை தான் அண்ணாமலை செய்து வருகிறார்- சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி…

published 1 year ago

பாஜகவை சவக்குழிக்குள் அனுப்புவதை தான் அண்ணாமலை செய்து வருகிறார்- சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி…

கோவை: பாஜகவை சவக்குழிக்குள் அனுப்புவதை தான் அண்ணாமலை செய்து வருகிறார் என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வாச்சாத்தி வழக்கை 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய பெருமை சிபிஎம் கட்சிக்கும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும் உண்டு எனவும் இவ்வழக்கில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறிய அவர் தற்போது வனத்துறை, காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்பை முழு மனதோடு வரவேற்கிறோம் என்றார். ஏழை பழங்குடி மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பதற்கு இந்த தீர்ப்பை அதிகாரிகள் படிப்பினையாக எடுத்து கொண்டு செயல்பட வேண்டும் எனவும் கூறினார்.

வருகின்ற 2 ம் தேதி விடுதலை போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை ஆளுநர் நடத்த இருப்பதை குறிபிட்ட அவர் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக ஆளுநர் ஆர்.என்.ரவி காந்தி ஜெயந்தியன்று மரியாதை செலுத்த எந்த அருகதையும் இல்லை என்றார்.  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நடைபயணம் அல்ல, அது இறுதி யாத்திரை என நான் சொன்னது தான் நடந்து கொண்டுள்ளது எனவும் கூறினார். அதிமுக - பாஜக இடையேயான உறவு முறிந்துள்ளதை குறிப்பிட்ட அவர் இனி வரும் நாட்களில் என்னென்ன முறியுமோ என தெரியவில்லை என்றார். பாஜகவை ஒவ்வொரு நாளும் சவக்குழிக்கு அனுப்பும் வேலையை அண்ணாமலை செய்து வருவதாகவும் தெரிவித்த அவர் அண்ணாமலை அரசியல் முதிர்ச்சியற்ற தலைவர் என்பதை காட்டி வருவதாக சாடினார்.  

கோவை எம்.பி.யால் தான் கோவை வளர்ச்சி இல்லாத நகராக மாறிவிட்டது, கோவையில் தொழில் முடங்கியதற்கு அவர் தான் காரணம் என்று அண்ணாமலை சொல்லியுள்ள கூறிய அவர் கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜனை மக்கள் ஓட்டு போட்டு தான் தேர்ந்தெடுத்தார்கள் எனவும் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற தகுதியில்லாத அண்ணாமலை இவரை குறை சொல்வது ஏற்புடையது அல்ல என்றார். நாடு முழுக்க தொழில்கள் முடங்க பாஜகவின் பொருளாதார கொள்கை தான் காரணம் எனவும் குற்றம் சாட்டினார். அண்ணாமலை திமுக அரசு மீது இல்லாதது பொல்லாததை எல்லாம் சொல்லி வருவதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் தெரிவித்தார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்
திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு அடிப்படையில் தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிடுவோம் எனவும் கூறினார். 

அகில இந்திய கட்சியான பாஜக தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என போராட்டம் நடத்துவது நியாயமா? என கேள்வி எழுப்பிய அவர் பாஜக அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்திற்கு விரோதமாக செயல்படுவதாக சாடினார். காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா மாவட்டங்களில் பந்து நடத்தப்படும், பாஜக பந்திற்கு கர்நாடக அரசு பணிவது ஏற்றுக் கூடியது அல்ல எனவும் கூறினார்.

அதிமுக உடனான கூட்டணி முறிவால் பாஜக நிலைகுனிந்துள்ளதால், அண்ணாமலை கூட்டணி குறித்து பேசவில்லை எனவும் தெரிவித்தார். கூட்டணியில் இருந்து அதிமுக விலக அண்ணாமலை பேச்சு மட்டும் போதுமா? பாஜகவின் கொள்கைகள் பற்றி கவலையில்லையா? அண்ணாமலை பேச்சுக்காக கூட்டணியை முறிப்பது சரியாக இருக்குமா? பாஜகவை வீழ்த்தும் போராட்டத்தில் திமுக உடன் இணைத்துள்ளோம் என்றார். திமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்ட நாங்கள் தவறுவதில்லை எனவும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு அறவே இல்லை எனவும் தெரிவித்தார். அதிமுக பாஜகவோடு சேர்ந்தாலும், தனியாக இருந்தாலும் அதிமுகவை எதிர்ப்போம் எனவும் பாஜகவுடன் இருந்து பிரிந்ததால் அதிமுக நல்ல கட்சி என சொல்ல மாட்டோம் எனவும் தெரிவித்தார். 

இந்தியா கூட்டணியில் கொள்கை ரீதியாக இணைந்து இருக்கிறோம் என தெரிவித்தார். ஒரு கட்சி கொள்கையை முன் வைத்து தான் ஓட்டு கேட்க வேண்டுமே தவிர தனி நபரை முன்னிறுத்தி ஓட்டு கேட்கக் கூடாது எனவும், நேரு முதல் மன்மோகன்சிங் வரை கொள்கைகளை முன்வைத்தே ஓட்டு கேட்டார்கள் எனவும் தெரிவித்தார். இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும், தேர்தலுக்கு பிறகும் பிரதமர் வேட்பாளர் பிரச்சனை வராது என்றார்.

தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல் நிலை கூட்டணி திமுக கூட்டணி தான் என கூறினார். கமல்ஹாசன் இந்தியா கூட்டணிக்கு வருவதை வேண்டாம் என சொல்லவில்லை எனவும் அது குறித்து அனைவரும் ஆலோசித்து தான் கூற முடியும் எனவும் அது நாளைக்கே முடிவாகும் என சொல்ல முடியாது என்றார். கோவை, மதுரை தொகுதிகளை இந்த தேர்தலிலும் கேட்டு பெற்று போட்டியிடுவோம் எனவும் இந்தியா கூட்டணி பாஜகவை வீழ்த்த ஒன்றாக இருக்கும் என்றார்.  ஒவ்வொரு மாநில நிலைக்கு ஏற்ப கூட்டணி முடிவு செய்யப்படும் எனவும் கூறினார். என்ஐஏ விசாரணை எல்லை தாண்டி செல்கிறது என தெரிவித்த அவர் சிறுபான்மை மக்களை பழிவாங்கும் வகையில் நூற்றுக்கணக்கான மக்களை சிக்க வைக்க முயற்சி நடக்கிறது என்றார். மேலும் அமலாக்கத் துறை பாஜகவின் இளைஞரணியாக உள்ளது எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் உட்பட சிபிஎம் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe