கோவை: லாட்டரி அதிபர் மார்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் கடந்த 2002-2003 நிதியாண்டில் மார்டின் இந்தியாவிலேயே அதிக தனிநபர் வருமான வரியை செலுத்தியுள்ளார் என்று மார்டின் குழுமம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
கோவையை சேர்ந்தவர் மார்ட்டின். லாட்டரி அதிபரான இவரது வீடு கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ளது. இந்நிலையில் கடந்த 12-ந் தேதி முதல் வெள்ளக்கிணறில் உள்ள அவரது வீடு, அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி மற்றும் கோவை கிராஸ்கட் ரோடு 6-வது வீதியில் உள்ள அலுவலகம் ஆகிய 4 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை மேற்கொண்டனர். 5 நாட்களாக நடந்த இந்த சோதனை 16ம் தேதி நிறைவடைந்தது.
இந்த சோதனை குறித்து மார்ட்டின் குழுமம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
எங்களது மார்ட்டின் குழும நிறுவனத்திற்கு சொந்தமான இந்தியா முழுவதும் உள்ள பலவேறு இடங்களில் கடந்த 12ம் தேதி காலை 7 மணி முதல் 16ம் தேதி காலை 10 மணி வரை நடத்தப்பட்ட வருமான வரி சோதனை தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் குறித்த நவறான புரிதல்களை நீக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, நாங்கள் பின்வரும் விளக்கங்களை கூற விரும்புகிறோம்.
முதலாவதாக இந்தியா முழுவதும் உள்ள எங்களது குழும நிறுவனங்களில் அமலாக்க துறையால் சோதனை நடத்தப்படவில்லை. மாறாக நடைபெற்றது வருமான வரித்துறை சோதனையாகும். இதனை மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் இயங்கி வரும் வருமான வரித்துறையினர் நடத்தினர். இதற்காக எங்கள் நிறுவனங்களின் அதிகாரிகள் தங்களது ஒத்துழைப்பை முழுமையாக வழங்கியுள்ளனர்.
ஆனால் "சட்ட விரோத பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) விதிகளின் கீழ் அமலாக்க துறையினரால் சோதனை நடத்தப்பட்டது என்று பல்வேறு செய்தி சேனல்கள், அச்சு மற்றும் டிஜிட்டல் வாடகங்களில் உண்மைக்கு மாறான, அவதூரான மற்றும் எட்டந்திற்க புறம்பான பல்வேறு தகவல்களை செய்தியாக வெளியிட்டிருப்பதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.
மேற்கண்ட செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை அமலாக்க துறை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டது என ஊடகங்கள் கூறுவது உண்மைக்கு புறம்பானதும் மற்றும் பொய்யானதும் ஆகும். இரண்டாவதாக, இந்திய அரசியலமைப்பின் மத்திய சட்டம், பட்டியலில் உன்ள ஏழாவது அட்டவணை, வரிசை 40 இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையிலும், மேலும் இந்திய அரசாங்கம் இயற்றிய லாட்டரி {ஒழுங்குமுறை} சட்டம், 1996 மாற்றும் லாட்டரி (ஒழுங்குமுறை) விதிகள். 2010ன் கீழும், மேற்கூறிய சட்டங்களின் படி அந்தந்த மாநில லாட்டர் விதிகளுக்கு இணங்க, இந்தியாவில் லாட்டரி வாத்தகத்தை ஒழுங்கமைக்கவும், நடத்தவும் மாநில அரசுகள் பெற்றுள்ள அதிகாரத்தின் படியும், இயற்றப்பட்ட விதிகளின்படியும், முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு எங்கள் நிறுவனங்கள் இந்தியாவில் மாநில அரசாங்க லாட்டரிகளை லாட்டரி வர்த்தகம் அனுமதிக்கப்பட்ட மாநிலங்களில் விற்கின்றன.
மேலும், மாநில அரசுகளால் அரசிதழில் வெளியிட்டு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு இணங்க விதிகளின்படி செயல்பட்டு வருகிறது.
மூன்றாவதாக, எங்களது குழும தலைவர் மார்ட்டின் கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிகமாக தனிநபர் வருமான வரி (தோராயமாக ரூ.100 கோடியை) செலுத்தியுள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அவரும் அவரது குழும நிறுவனங்களும் கூட்டாக கீழ்கண்டவாறு வரி செலுத்தியுள்ளனர்:-
எங்களது குழும் நிறுவனங்கள் ஜூலை, 2017 முதல் செப், 2023 வரை ஜி.எஸ்.டியாக (GST) ரூ.23.119 கோடிகள் மாநில/மத்திய அரசுகளின் கீழ் உள்ள அந்தந்தத் துறைகளுக்கு வரியாக செலுத்தியுள்ளனர். இவ்வாறாக ஆண்டுக்கு சுமார் ரூ.5,000 கோடிகளை ஜி.எஸ்.டி வரியாக செலுத்தியுள்ளனர்.
1985-1986 வது நிதியாண்டு முதல் 2022-2023 வது நிதியாண்டு வரை வருமான வரியாக ரூ4.577 கோடிகள் மாற்றும் முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரியாக சுமார் ரூ.600 கோடிகளை இந்திய அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தியுள்ளனர், வருமான வரித்துறை சோதனையின்போது மேற்கூறிய அனைத்து விவரங்களும் சோதனை அதிகாரிகளுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களது குழும நிறுவனங்களும், அதன் தலைவர் மார்டின் அவர்களும் இந்திய சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு நிறுவனங்களை நடத்திவருகின்றனர் என்றும் மேலும், இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வருகின்றனர். ஆனால் வருமான வரித்துறை சோதனை தொடர்பான உண்மைகளை மிகைப்படுத்தி தவறாக சித்தரித்து மார்ட்டின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கற்பனைக்கு அப்பாற்பட்ட விபரங்களை செய்தியாக வெளியிடுவது எங்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதோடு மட்டுமல்லாமல், மக்களிடத்தில் எங்களைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாக அமைந்துள்ளது.
எனவே இது போன்ற தவறான சித்தரிப்பு மற்றும் அறிக்கைகளை நம்புவதிவிருந்து பொதுமக்கள் அனைவரும் தெளிவுறும் வகையில் இந்த விளக்கத்தினை தெரிவிக்கின்றோம். எங்களது குழுமத்தினர் நேர்மையான குடிமக்களாக இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.