கோவை: கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது பேசியவர், 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, டெல்லி அரசாங்கத்தில் பெரும் ஊழல் செய்த ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மக்கள் சரியான தீர்ப்பை தந்துள்ளதாகவும், ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியை திமுக கொண்டாட இயலாது எனவும் தெரிவித்தார்.
மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்பை அரசு அமல்படுத்தி, இந்துக்களின் மத உணர்வுகளை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,
"தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல்களில் பாஜக தொடர் வெற்றிகளை பெற்ற போதும், சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று வந்தது.
இந்த ஆண்டு தேர்தல் பணிக்காக டெல்லி சென்றிருந்தேன். முந்தைய தேர்தல் காலங்களில் குழந்தைகள் கூட கையில் ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான தொடப்பத்தோடு இருப்பார்கள். அந்த அளவிற்கு அந்த கட்சி பிரபலமாக இருந்தது. இந்த முறை அந்த பிரபலத்தை பார்க்க முடியவில்லை. எனவே, இந்த தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடையும் என நான் தெரிவித்திருந்தேன்.
1993 ஆம் ஆண்டு பாஜக 43 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி அடைந்திருந்தது. இன்று 48 சதவீதம் பெற்றுள்ளது. இந்த மாற்றத்திற்கு காரணம், இந்த வெற்றிக்கு காரணம், பிரதமர் மோடி அரசின் திட்டங்கள் மக்கள் மனதை தொட்டுள்ளது என்பது தான்.
மேலும் ஆம் ஆத்மி ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல்கள், அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் மோசமாக பேசிய கருத்துக்கள் ஆகியவற்றை மக்கள் ரசிக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக ஹரியானா அரசு யமுனா நதியில் விஷம் கலந்ததாகவும் டெல்லி மக்களை இனப்படுகொலை செய்ய முயன்றதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதை மக்கள் ரசிக்கவில்லை.
கட்சி ஆரம்ப கட்டத்தில் ஆரம்பித்தபோது மிகவும் எளிமையாக இருந்தவர்கள் இன்று ஊழல் செய்து ஆடம்பரமாக உள்ளனர். குறிப்பாக கெஜ்ரிவாலின் வீட்டு கழிவறையில் தங்க பிளேட் வைக்கும் அளவிற்கு ஊழல் செய்துள்ளார். சாராய எக்ஸ்சைஸ் டூட்டி ஊழல் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வாக்கு இயந்திர கோளாறு, ரைடு, கைது என ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இப்போது சிலர் பேசலாம். சாராய ஊழலை முதலில் முன் வைத்தது காங்கிரஸ்தான். அதை தொடர்ந்து தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் பாஜகவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை.
மேலும், ஜீரோ எம் எல் ஏ என்பதை ஹாட்ரிக்காக வாங்கிய ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேச துரோகியாக மாறி கருத்துக்களை தெரிவித்து வந்த காங்கிரஸ் கட்சி துடைத்து எரியப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள் இப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு தமிழ்நாட்டின் திராவிட தலைவர்கள் உட்பட பலர் உதாரணமாக இருந்தாலும், கெஜ்ரிவால் அதில் முதன்மையானவர். அவரை தோற்கடிக்க வேண்டும் என்கிற திடமான முடிவை டெல்லி மக்கள் எடுத்துள்ளனர். இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் டெல்லியில் உள்ள தமிழர் என்கிலேவ் பகுதியில் நானும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சென்றபோது, அங்குள்ள தமிழர்கள் மத்தியிலும் பாஜகவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது என்பதை நேரில் பார்க்க முடிந்தது" என தெரிவித்தார்.
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை எதிர்த்து ஆண்டுதோறும் பாஜக சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த பாஜக முடிவு செய்துள்ளது என்பதையும் எச். ராஜா தெரிவித்தார்.
மேலும் பேசியவர், "இடைத்தேர்தலில் பொதுவாக ஆளும் கட்சி தான் ஜெயிக்கும். திருமங்கலம் ஃபார்முலா என்ற ஒன்றைக் கொண்டு வந்து திமுக அப்போது இடைத்தேர்தலில் ஜெயித்தாலும், பொது தேர்தலில் தோல்வி அடைந்தது. ஈரோடு இடைத்தேர்தலில் பிரதான கட்சிகள் போட்டியில் இல்லை என்றாலும் பணத்தை வழங்கி, பட்டியில் மக்களை அடைத்து திமுக ஜெயித்துள்ளது. இதை பெரும் வெற்றியாக திமுக கருத முடியாது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது குறிப்பிட்ட மாவட்டத்திற்குள் அடங்கும் கட்சியாகும், தேசிய அரசியல் குறித்து அவர்கள் பேசும் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.
பட்ஜெட்டில் உரிய நிதி வழங்கப்படவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுவது அப்பட்டமான பொய்யாகும். பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பாஜக நிர்வாகிகள் அனைவரும் மக்களிடம் எடுத்து சென்று வருகிறோம்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தினம்தோறும் பல பாலியல் வழக்குகள் பதிவாகிறது, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுகிறது, இதை எல்லாம் மறைப்பதற்காகவே மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் வீணாக பணி சுமத்துகிறார்.
காவல்துறை ஏடிஜிபி கல்பனா சீருடை தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து கூறியதற்காக எரிக்கப்பட்டு கொலை செய்யும் முயற்சி நடந்ததாக தெரிவித்துள்ளார். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு இதைவிட அவமானம் வேறு எதுவும் இல்லை. நான் முதல்வராக இருந்திருந்தால் பதவியை இதற்காக ராஜினாமா செய்திருப்பேன்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும். கூட்டணி குறித்து மேலிடம் முடிவு செய்து அறிவிக்கும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்தவரை அங்கு தர்கா இல்லை என தமிழக அரசின் சுற்றுலாத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தரின் கல்லறை கோரிப்பாளையத்தில் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
விஜயநகரப் பேரரசு மன்னர் படையெடுத்த போது அவரிடம் தப்பிப்பதற்காக மலை ஏறிய சிக்கந்தர் கொல்லப்பட்டார் எனும் வரலாறு, மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 1915 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை திருப்பரங்குன்றம் மலையில் தர்கா விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் குறித்து பல்வேறு தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கி உள்ளது.
திமுக கூட்டணி எம்பிகள் அங்கு சென்று உயர் பலி கொடுத்த போது தான் பிரச்சனை தீவிரமானது. இந்து கோவில்களில் உயிர் பலி கொடுத்து வழிபாடு செய்யும் நடைமுறையும் உள்ளது. ஆனால் முருகன் மற்றும் சிவன் ஆலயங்களில் உயிர் பலி கொடுப்பதில்லை. திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரத்தில் முருகன் கோயில், மேலே சிவன் கோவில் உள்ளது. அங்கு உயிர்பலி கொடுக்கக் கூடாது என்பதை தான் உயிர்பலி கொடுத்து வழிபடும் இந்துக்களே முன் வைக்கின்றனர்.
அவர்கள் பிரச்சனை செய்த பின்பு தான் காடேஸ்வராசுப்ரமணியம் உள்ளிட்டோர் அங்கு செல்கின்றனர். அவர்களை வெளியூர் ஆட்கள் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எல்லா இடங்களிலும் இந்து கோவில்களை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். ஆனால் எந்த ஒரு மசூதியையோ, சர்ச்சையோ இடித்து இந்து கோவில் கட்டப்பட்டதாக இல்லை. எனவே இவர்கள் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்றி இந்து மதத்தினரின் உணர்வுகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.
மேலும், திமுகவில் தற்போது இருப்பவர்கள் அனைவரும் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் தான் அவர்களின் கைகள் தான் திமுகவில் தற்போது ஓங்கி உள்ளதாக திமுகவினர் சிலரை கூறி வருகின்றனர் என தெரிவித்தார்.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!