பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...

published 1 year ago

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...

கோவை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் தொடர்ந்து போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நான்கு கட்ட போராட்டங்களை அறிவித்திருந்தனர். அதன்படி முதல் கட்டமாக இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண் போட்டியை களைய வேண்டும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும், பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கும் மேலாக உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பணிக்காலத்தை பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.

மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஜாக்டோ ஜியோ வை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோவை மாவட்ட செயலாளர் சி.அரசு, அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத பட்சத்தில் வருகின்ற 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதனை தொடர்ந்து 28ஆம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்திடவும் மாநில அமைப்பு முடிவு செய்துள்ளதை ஏற்று அதற்காக தயாராகி வருவதாக தெரிவித்தார். எனவே தங்களது கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe