கோவை சரவணம்பட்டி பகுதியில் 20கோடி மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு- நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்...

published 11 months ago

கோவை சரவணம்பட்டி பகுதியில் 20கோடி மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு- நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்...

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி 4 வது வார்டுக்குட்பட்ட  வி.கே.வி குமரகுரு நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் சமுதாயக் கூடத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் உள்ளது. இதனை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து அதில் பூங்கா அமைத்து நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் வார்டு உதவி பொறியாளர் சக்திவேல், கோவை மாநகராட்சி வடக்கு மண்டல நகர அமைப்பு அதிகாரி எழில்,கோவை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு புகார் மனு  அளித்திருந்தனர். அந்த புகார் மனுவில், சரவணம்பட்டி பேரூராட்சியாக இருக்கும் போது 1986 ஆம் ஆண்டு சரவணம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட விகேவி குமரகுரு நகர் உருவாக்கப்பட்டது. அப்போது இந்த மனைப்பிரிவை பிரிக்கும் போது  1 ஏக்கர் பரப்பளவில் சமுதாய கூடத்திற்கும், அதேபோல குடியிருப்பு மக்களுக்கான பூங்காவிற்கான இடமும் ஒதுக்கப்பட்டு மனைப்பிரிவு அரசு அங்கீகாரம் பெறப்பட்டது.
 

அதனைத்தொடர்ந்து பேரூராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட போது இந்த இடங்கள் அனைத்தும் மாநகராட்சியிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. இதில் விகேவி குமரகுரு நகர் பகுதியில் சமுதாய கூடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 1 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்துடன் கோவை மாநகராட்சி எல்லை முடிவடைகிறது. அதனை அடுத்து கீரணத்தம் ஊராட்சி தொடங்குகிறது. இந்த கீரணத்தம் ஊராட்சி பகுதியில் உள்ள ஒரு இடத்தை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் வாங்கி மனைப்பிரிவுகளாக பிரித்துள்ளது. 

மேலும் இந்த மனைப்பிரிவுக்கு அருகில் விகேவி குமரகுரு நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை அந்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து பூங்காவாக அமைத்துள்ளனர்.  தற்போது இப்பகுதியில் ஒரு சென்ட் இடத்தின் சந்தை மதிப்பு ரூ.18 லட்சம் என்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பூங்கா அமைக்கப்பட்டுள்ள 1 ஏக்கர் இடத்தின் மதிப்பு ரூ.20 கோடிக்கு மேல் இருக்கும். இவ்வாறு அந்த புகார் மனுவில் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் 
கோவை மாநகராட்சி 4வது வார்டு உதவி பொறியாளர் சக்திவேல், உதவியாளர் ஸ்ரீதர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், கோவை மாநகராட்சி 11 வது வார்டு கவுன்சிலருமான சிவா என்ற பழனிச்சாமி, கோவை மாநகராட்சி 6வது வார்டு மாமன்ற  உறுப்பினரும் மாநகராட்சி பணிக்குழு உறுப்பினருமான பொன்னுசாமி ஆகியோர் அப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். 

இந்த ஆய்வில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பூங்கா அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பணிகளை 1 வார காலத்திற்குள் முழுமையாக அகற்ற வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe