குளிர்ச்சியான ஊட்டிக்கு ‘கொடும்’ பாதை ரெடி! மண் சரிந்தால் மொத்தமும் காலி

published 8 months ago

குளிர்ச்சியான ஊட்டிக்கு ‘கொடும்’ பாதை ரெடி! மண் சரிந்தால் மொத்தமும் காலி

– கடுங்கணியன்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளின் இயற்கை அழகை ரசிக்கவும் அங்கு நிலவும் குளிர்ச்சியை உணரவும் ஆண்டு தோறும் ஏப்ரல் – மே மற்றும் செப்டம்பர் – அக்டேபர் மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்வர்.

குறிப்பாக, வெளி மாவட்டம், மாநிலம் மட்டுமின்றி வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருவர்.
ஆனால், சமீப காலத்தில், கோடை – சீசன் என்றில்லாமல் அனைத்து வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பக்கத்து மாவட்டங்கள், மாநிலத்தவர்களின் அதிகப்படியான வருகையை எதிர்கொள்கிறது நீலகிரி.

குறிப்பாக, 10 முதல் 15 ஆயிரம் வாகனங்கள் ஊட்டி, குன்னூரை நோக்கி வந்து செல்கின்றன.
இந்த வாகனங்களால் ஊட்டி நகரில் மட்டுமின்றி மலைப் பாதையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சுற்றுலா வாகனங்கள் பல மணி நேரம் மலைப் பாதையில் சிக்குகின்றன. குறிப்பிட்ட நேரத்தில் தங்குமிடத்தை அடைய முடியாமலும், பார்க்கத் திட்டமிட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியாமலும் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

போக்குவரத்து சிக்கல்களால் பலரும் தங்களது பயணத்தைப் பாதியில் முடித்துக் கொள்கின்றனர்.

மாற்றுப்பாதை

ஊட்டிக்குச் செல்ல இருக்கும் இரு சாலைகளிலும் போக்குவரத்து பிரச்னை ஏற்பட்டது. இதற்குத் தீர்வு காண, மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள், குன்னூருக்குச் செல்லாமல் நேரடியாக ஊட்டிக்குச் செல்லும் வகையில், 20.5 கி.மீட்டருக்கு 5 மீட்டர் அகலத்தில் ரூ.40 கோடி மதிப்பில் 3வது பாதையை மாநில நெடுஞ்சாலைத் துறை அமைத்து வருகிறது.

இந்த மாற்றுப் பாதை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மலைப் பாதையில் வரும் வாகனங்கள் காட்டேரி பகுதியில் இருந்து திருப்பி சேலாஸ், கெந்தளா, கேத்தி பாலாடா, கொல்லிமலை, காந்திப்பேட்டை வழியாக ஊட்டிக்குச் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.

"மாற்றுப்பாதைப் பணி நிறைவடைந்தால் குன்னூர் செல்லாமல் ஊட்டிக்குச் செல்ல முடியும். பல இடங்களில் வாகன நெரிசலைத் தவிர்க்க முடியும். தற்போது, 80 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் சாலை பயன்பாட்டிற்கு வரும்" என,  நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் பாலச்சந்திரன் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளனர்.

வன உயிர்கள் பாதிப்பு

"காட்டேரியில் இருந்து ஊட்டி வரையிலான பாதை, மிகக் குறுகியதாக சிறு வண்டிப் பாதை அளவிற்கே இருந்தது. பாறைகள் அதிகம் இல்லை. அதிகமும் செம்மண் பூமி தான். அதனால், அதிக மரங்கள் சூழ்ந்து அடர் வனமாகக் காட்சியளிக்கிறது.

வனப்பகுதியில் காட்டெருமை, மான், சிறிய வகைப் பாலூட்டிகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளன.

இந்த வனத்தினூடாகச் செல்லும் இந்தப் பாதையில் கெட்டிப் பள்ளத்தாக்குப் பகுதி உள்ளது. பல இடங்களில் சிற்றருவிகளும் சிறு ஓடைகளும் உள்ளன. இடப்படியான வனப் பாதையைப் பல இடங்களில் 4 மடங்கு வரை அகலப்படுத்தி உள்ளனர்.

அதற்காக மலையை வெட்டியுள்ளனர்.
இதனால் அங்கு வாழும் வன உயிரிகளின் வாழிடம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவை தண்ணீர் அருந்தச் செல்லும் பாதைகளை அகலமான தார்ச் சாலை குறுக்கிடுகிறது.

தார்ச் சாலையைக் கடக்கும் போது வன விலங்குகள் வாகனங்களில் மோதி விபத்தில் சிக்க நேரிடும். மேலும் அப்பகுதியில் அதிகப்படியான வானகங்கள் செல்கையில், மண் சரிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

சுற்றுலா மேம்பாட்டிற்காகச் சூழலைக் கெடுத்து, வனத்தை அழித்து, வன உயிரிகளைத் தொந்தரவு செய்யக் கூடாது எனக் கூறி, மாற்றுப்பாதைத் திட்டத்தைக் கைவிடக் கோரினோம்.

வனப் பாதுகாப்பின் மீது சிறிதும் அக்கறையின்றிப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது" என, சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இந்த மாற்றுப் பாதை அமைக்க இதுவரை மலைப் பகுதிப் பாதுகாப்பு ஆணையத்திடம் (HACA) முறையான அனுமதியும் பெறவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

நகர் மயமாக்கலால் இயற்கையை இழந்து வெப்ப அலையில் சிக்கித் தவிக்கும் மக்கள், ஓரிரு நாட்களாவது இயற்கையை, அதன் உன்னத அழகைத் தங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களுடன் ரசித்துணரத் துடிக்கின்றனர்.

அவர்கள், நீலகிரி மலைக் காடுகளில் எஞ்சியிருக்கும் இயற்கை அழகை ரசிக்கவும் அதன் குளிர்ச்சியை உணரவும் சுற்றுலா வருகின்றனர்.

இயற்கையை ரசிக்க வருவோருக்காக இயற்கையையே அழித்து அமைக்கப்படும் இப்படியொரு கொடும் பாதை தேவைதானா?
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe