கோவை: கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, தான் ராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 19ல் நடைபெற்றது. தொடர்ந்து பிப்ரவரி 22ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழகத்தில் வெற்றிக்கொடி நாட்டியது தி.மு.க. அதே நேரத்தில், யாரும் எதிர்பார்க்காத வெற்றியை கோவையில் பதிவு செய்தது.
தோல்வி-வெற்றி
ஏனென்றால், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கடந்த 2021ம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. அதாவது, அ.தி.மு.க 9 இடங்களிலும், அ.தி.மு.க ஆதரவுடன் களம் கண்ட பா.ஜ.க கோவை தெற்கு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
இது தி.மு.க.வுக்கு பேரிடியாக அமைந்தது. கோவையில் 'வாஷ்-அவுட்' ஆகும் நிலை தி.மு.க.வுக்கு ஏற்பட்டது. ஆனால், உள்ளாட்சி தேர்தல் கணக்குகளே வேறு என்று தி.மு.க தலைமை நம்பியது.
கரூர் படை

2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கரூர் படையுடன் கோவை வந்த செந்தில் பாலாஜி, தீவிரமாக தேர்தல் பணி மேற்கொண்டார். அப்போது கொலுசு உட்பட ஏராளமான பரிசுப்பொருட்களும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் உள்ள 100 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 96 வார்டுகளில் வெற்றி பெற்றது. தி.மு.க மட்டும் 73 இடங்களில் வென்றது. சுயேச்சை ஒரு இடத்தில் வெற்றி பெற்றார்.
கோவை எங்கள் கோட்டை என முழங்கி, நகரின் நுழைவில் நூறடியில் கொடிக்கம்பம் நாட்டிய அ.தி.மு.க.வுக்கு மூன்றே இடங்கள் கிடைத்தன.
வெற்றியைத் தொடர்ந்து, கோவையில் முதன் முறையாக பெண் கவுன்சிலர் ஒருவரை மேயராக்க தி.மு.க தலைமை முடிவெடுக்க, இங்குள்ள சீனியர்கள் தங்கள் மனைவிக்கும், பிள்ளைக்கும் மேயர் பதவி கிடைக்க வேண்டும் என்று தீவிரமாக காய் நகர்த்தினர்.
சமரசமற்ற கோவை செய்திகளுக்கு NewsClouds தளத்தின் செய்திக்குழுவில் இணைந்து கொள்ளலாம்; குழுவில் இணைய லிங்க்-ஐ கிளிக் செய்க
சாதாரண பெண்
ஆனால், யாருமே எதிர்பார்க்காத விதமாக மணியகாரன் பாளையம் 19வது வார்டில் போட்டியிட்ட கல்பனா மேயராக தேர்வு செய்யப்பட்டார். இவரது கணவர் ஆனந்தகுமார் அப்பகுதி பொறுப்புக் குழு உறுப்பினராக மட்டுமே இருந்தவர்.
மேயராக தேர்வான பின் கல்பனா சென்னைக்குச் செல்ல வேண்டி இருந்தது. பேருந்திலேயே பயணித்து சென்னை சென்று பயிற்சியை முடித்து வந்த கல்பனாவை கோவை மக்கள் மெச்சினர்.
ஆனால், கல்பனா அடுத்தடுத்து சர்ச்சைக்குள்ளானார். ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு பங்களாவை ரூ.1 கோடி செலவில் புனரமைத்தது, சக கவுன்சிலர், அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்தது போன்றவை பிரதான குற்றச்சாட்டுகளாக தலைமையிடம் முன்வைக்கப்பட்டன.
புகார் மேல் புகார்
இந்த நேரத்தில், மணியகாரன் பாளையம் பகுதியில் கல்பனா வீட்டிற்கு அருகே வசிக்கும் சரண்யா என்பவரை, வீட்டை காலி செய்ய வைக்க கல்பனா மற்றும் அவரது குடும்பத்தார் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. வீட்டை காலி செய்ய வைக்க சிறுநீர் பிடித்து ஊற்றுவதாகவும் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது.
இது கட்சிக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தியது. கல்பனா மீதான நன்மதிப்பையும் கெடுத்தது. மக்களவைத் தேர்தல் பணிகளில் அவர் பெரிய அளவில் தலையீடு இல்லாமல் இருக்க, அது கட்சிக்கு அதிருப்தியை கொடுக்க, சரியான நேரம் பார்த்துக் காத்திருந்த சீனியர்களோ 'ரிப்போர்ட்' கொடுக்க, இறுதியில், கல்பனாவை ராஜினாமா கடிதம் கொடுக்கக் கூறியது தலைமை.
அதன் பேரிலேயே “உடல்நலக்குறைவு காரணமாக ராஜினாமா" செய்வதாக கோவை மாநகராட்சி கமிஷனரிடம், கல்பனா ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளதாகவும், அதனையும் தானே சென்று கொடுக்காமல், வேறு ஒருவர் மூலமாக கொடுத்துவிட்டதாகவும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
பாதியில் போனது பதவி

கோவை மாநகராட்சியில் செ.ம.வேலுச்சாமியைத் தொடர்ந்து மேயர் பதவிக்காலம் முடியும் முன்னரே பதவியை ராஜினாமா செய்த 2வது மேயரானார் கல்பனா ஆனந்தகுமார். கோவையின் "முதல் பெண் மேயர், தனது பதவிக்காலம் முடியும் முன்னதாகவே ராஜினாமா செய்தார்" என்பது கோவையின் வரலாற்றில் ஆழப்பதியப்போகிறது.
அடுத்து என்ன?
கோவை முனிசிபல் கார்பரேசன் விதி 1981, பிரிவு 37ன் படி, மேயர் கொடுத்த ராஜினாமா கடிதம் சிறப்பு கவுன்சிலில், அனைத்து கவுன்சிலர்கள் முன்னிலையில் முன்வைக்கப்படும்.
இந்த சிறப்பு கவுன்சில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளதாகவும், கவுன்சிலின் முடிவுப்படியே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
யார் மேயர்?
மேயர் பதவிக்கு சீனியர்கள் முந்தும்முன், அடுத்த மேயரை தி.மு.க தலைமை தேர்வு செய்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, ஆனந்தகுமார் போலவே, அடிப்படை நிர்வாகி ஒருவரின் மனைவிக்கு மேயர் பதவியை ஒதுக்க தி.மு.க திட்டமிட்டுள்ளதாகவும், அவர் சிங்காநல்லூர் தொகுதியைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலை கட்சித்தலைமை உறுதிப்படுத்தவில்லை.
_ நியூஸ் க்ளவுட்ஸ் செய்திக்குழு,
சார்புகளற்ற ஊடகத்திற்கு ஆதரவு அரசியக