கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், இரவு பகலாக முதலமைச்சர் ட்வீட் செய்து கொண்டே இருக்கிறார், விமானத்தில் ஒன்றரை மணி நேரம் இருந்தபோது ஏதாவது ட்வீட் செய்திருக்கிறாரா என தெரிவித்தார்.
ஏதோ தமிழுக்கு இவர்கள் மட்டுமே காவலர்கள், இவர்கள் மட்டுமே தமிழ் பற்றாளர்கள், பாஜகவைச் சார்ந்தவர்கள், மத்திய அரசு தமிழ் மீது பற்று இல்லாதவர்கள் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முதலமைச்சர் முயற்சி செய்து வருகிறார் எனவும் அதன் வெளிப்பாடு தான் பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதம் எனவும் பிரதமர் மோடி மாநிலம் கடந்தும் தமிழை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார் என்றார். ஆனால் ஏதாவது ஒரு காரணம் கிடைக்குமா? நாம்தான் தமிழ் பற்றாளர்கள் என மீண்டும் மீண்டும் ஒரு பொய்யைச் சொல்லி மக்களை ஏமாற்றினோம், மீண்டும் ஏமாற்ற வேண்டும் என்ற அவசரம் முதலமைச்சரிடமும் அவரது டுவிட்களிலும் தெரிவதாக கூறினார்.
தமிழ் மாதம், வாரம் தமிழை கொண்டாடுவோம், ஆனால் இன்னொரு மொழியை கொண்டாடுவதன் மூலம் தமிழ் சிறுமைப்படுத்தப்பட்டு விட்டது என்ற வார்த்தையை தான் மறுப்பதாகவும், ஏனென்றால் தமிழை யாரும் சிறுமைப்படுத்த முடியாது, சிறப்புற தான் செய்ய முடியும், அதனால் இனிமேலாவது மொழி அரசியலை திமுகவினர் விட வேண்டும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் தமிழுக்கு எதிரானவர்கள் என சித்தரிக்க பார்க்கிறார்கள் என குற்றம் சாட்டிய தமிழிசை சௌந்தர்ராஜன், சமூக வலைதளங்களில் தன்னை ஹிந்திஇசை என பதிவிடுகிறார்கள், ஆனால் தமிழ் என்பது தன் பெயரில் மட்டுமில்லை, உயிரிலும் இருக்கிறது என்றார்.
திமுக அமைச்சர்களின் வீட்டுப் பிள்ளைகள் எத்தனை பேர் தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய தமிழிசை சௌந்தர்ராஜன், திமுகவினர் நடத்தக்கூடிய எல்லா பள்ளிகளில் மும்மொழி கொள்கை கடைபிடிக்கப்படுகிறது, அதற்கு முதலமைச்சர் அறிக்கை விட வேண்டும் என தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் விடுபடுவதில் தனக்கும் ஒப்புதல் இல்லை எனவும் தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக பாடப்பட வேண்டும் என்பதில் தானும் உறுதியாக இருப்பதாகவும், ஆனால் உள்நோக்கம் இல்லாமல் செய்த ஒன்றை உள்நோக்கத்தோடு செய்தார்கள் என்று கற்பிப்பது தான் தவறு என தாங்கள் கூறுவதாகவும் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஒரு கூட்டத்துக்கு செல்லும் போது அங்கே ஒரு பாடல் பாடப்படுகிறது என்றால் அதில் தவறு இழைத்தார்கள் என்றால் முழுமையான பொறுப்பை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன், தவறு நடந்திருக்கக் கூடாது , அதில் தான உறுதியாக இருப்பதாகவும் தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக, சரியாக, உணர்வுபூர்வமாக பாடப்பட வேண்டும், கட்டாயத்துக்காக பாடப் படக்கூடாது எனவும் ஆனால் அதை வைத்து ஒரு பூதாகரமான அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள், இந்த இரட்டை வேடத்தை கண்டிப்பதாகவும், அனைவரும் இரட்டை வேடம் போட ஆரம்பித்து விட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
சிதம்பரம் ஹிந்தி தினத்தை வாழ்த்தி பேசிவிட்டு நேற்று இந்திக்கு எதிராக பதிவிடுகிறார் எனவும் திமுக மொழி அரசியலை விட்டொழிக்க வேண்டும், ஏனென்றால் திமுகவினர் இப்படி பேசிப் பேசி தமிழை எந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறார்கள் என பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், தற்போது தமிழில் மாணவர்கள் அதிகமாக தோற்று கொண்டிருக்கிறார்கள் எனவும் சமஸ்கிருதம் வேண்டாம் என கூறிவருபவர்கள், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கரும்பலகையில் உருது எழுதுகிறார், இதற்கு என்ன பதில் கூறுகிறார்கள், இது மும்மொழி கொள்கையை? நான்கு மொழிக் கொள்கையா ? பொய் மொழிக் கொள்கையா? என்பதை அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொல்ல வேண்டும் என விமர்சித்த அவர் இனிமேலாவது மொழி அரசியலை விடுத்து ஆக்கபூர்வமான அரசியலுக்கு திமுக வரவேண்டும் என கேட்டுக் கொண்டார்
தமிழ் தாய் வாழ்த்தை தவறாகப் பாடுவதற்கு யாருக்கும் ஒப்புதல் கிடையாது, ஆனால் அதற்காக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது சரியில்லை என தெரிவித்த தமிழிசை சௌந்தர்ராஜன், உதயநிதி ஸ்டாலின் நேற்று கிரிவலம் சென்று இருக்கிறார் எனவும் பவன் கல்யாண் கூறியது உதயநிதியின் மனதில் தைத்து விட்டது என தான் நினைப்பதாகவும், அந்த கிரிவலத்துக்காக ஏற்பாடுகள் செய்தது தனக்கு மகிழ்ச்சி எனவும் 50 லட்சம் பேருக்கு மேல் வருவார்கள் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் இன்று தவறுகளை திருத்திக் கொண்டு உதயநிதி கிரிவலம் போக ஆரம்பித்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்..
கோவை மாவட்டத்தில் பல இடங்களில் வெடிகுண்டு புரளி வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டு பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், இது தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் இது புரளி தான் என விட்டுவிடக்கூடாது பள்ளிகளில் கல்லூரிகளில் வெடிகுண்டு புரளி வருவது கவலை அளிப்பதாகவும் காவல்துறை இன்னும் அதை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
வடமொழியில் உள்ளவர்கள் தமிழை படிக்கிறார்கள், நாம்தான் வியாக்கியானம் பேசிக் கொண்டிருக்கிறோம் எனவும், 1960 மாதிரி இல்லை காலம், இன்று அறிவு பறந்து விரிந்துபோயிருக கிறது. எல்லாவற்றையும் உள்நோக்காக வைத்து க் கொண்டிருக்கிறீர்கள் என்றால் திமுகவினர் தமிழுக்காக என்ன செய்திருக்கிறார்கள், அவர்களது நிறுவனங்களும் ஆங்கிலத்தில் பெயர் இருக்கிறது என்றால் தமிழ் பற்றாளர்களா? ஆங்கிலப் பற்றாளர்களா என கூற வேண்டும் என தெரிவித்தார்.
நீட் பயிற்சி மையத்தில் நடந்த சம்பவம் மனதுக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்த தமிழிசை சௌந்தர்ராஜன் இதற்கு நீட்டை பொருத்திப் பார்க்க வேண்டாம் எனவும் தமிழகத்தில் நீட்டை குறை சொல்வதை விட, பயிற்சி மையங்களை கட்டுப்படுத்துங்கள் எனவும் 78 அரசு பள்ளி மாணவர்கள் 7.5% சதவீத இட ஒதுக்கீடு இல்லாமல் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற ஆரோக்கியமான செய்தி வந்திருப்பதாகவும் இதை அப்படியே மறைத்து விடுவார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.
எது நடந்தாலும் அரசியலாக கூடாது என கூறுகிறார்கள் ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் , சென்னையில் அரை சதவீதம் கூட மழை வரவில்லை, விளையாட்டு மழைக்கு ஏதோ பெரிய ஏற்பாடு செய்தது போல அவர்கள் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் வேடிக்கை என விமர்சனம் செய்தார். மேலும் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளித்து இருப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் பவன் கல்யாண் கூறியதை தற்போது தான் இவர்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள் எனவும் பயபக்தியோடு இருக்க வேண்டும் என்பதுதான்.
பயந்துவிட்டார்கள் எனக் கூற மாட்டேன் பயபக்தியோடு இருக்க வேண்டும் அதுவும் இந்து பய பக்தியோடு இருக்க வேண்டும், அதற்கு இவர்கள் ஆரம்பிப்பது ஆரோக்கியமாக சூழ்நிலை என தெரிகிறது எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழ் தாய் வாழ்த்து முழுமையாக படிக்கப்பட வேண்டும் ,பாடப்பட வேண்டும் ,பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தை கொண்டு வந்தால் நல்லது என கேட்டுகொண்ட தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்பது தான் தனது கருத்து எனவும் இன்னும் இந்தியை வைத்து அரசியல் செய்யலாம் என நினைப்பதுதான் தவறு என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், ஆளுநர்கள் மோதல் போக்கை கொண்டு வருவதில்லை, ஆளுநரிடமும் முதலமைச்சர் இடமும் இணக்கமான சூழ்நிலை வர வேண்டும் , நேற்று நடந்த சம்பவத்தை கூட சமூகமாக தீர்த்திருக்கலாம், உடனே பூதாகரமாக மாற்றியது நல்லதல்ல எனவும் அப்போது தெரிவித்தார்..