கோவை: வை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் 27-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்வில் பாஜக தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா எம். பி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய வானதி சீனிவாசன், "பாஜக ஒரு பிரிவினருக்கான கட்சி என்ற பொய்யான பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது, எனது சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து மக்களுக்காகவும் பல்வேறு திட்டங்களை நான் செயல்படுத்தி வருகிறேன். தமிழகத்தின் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற ஒரே சட்டமன்ற அலுவலகமாக எனது அலுவலகம் உள்ளது" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் திமுக காங்கிரசிற்கு ஆதரவு அளித்த போதும் தான் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்றதாகவும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்பு தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் பிற பகுதிகளில் வெளியில் இருந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தான் நடந்துள்ளது, ஆனால் தமிழகத்தில் தான் உள்ளூர் தீவிரவாதிகளே தாக்குதல்கள் நடத்தியுள்ளனர் எனவும்,
பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்பு தீவிரவாதம் தமிழகத்தில் முற்றிலுமாக ஒழிக்கப்படும் எனவும் பேசினார்.
இதனை அடுத்து சிறப்புரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெளிநாட்டு பாதுகாப்பு கருவிகளை கொள்முதல் செய்வதோடு, உள்நாட்டிலும் அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்து வருவதாக குறிப்பிட்டார்.
அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,
"தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நடவடிக்கைகள் பரவிக் கொண்டிருக்கிறது, இங்கே அவர்கள் தங்களது நிகழ்வுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கோவை குண்டு வெடிப்பில் இறந்து போனவர்களுக்கு நினைவுத்தூண் அமைப்போம், மாதாந்திர பென்ஷன் இறந்து போனவர்களின் குடும்பத்தினருக்கு கொடுப்போம் என சொல்லி இருக்கின்றோம்" என தெரிவித்தார்.
6 முதல் 12 ம் வகுப்கு வரை ஐ சி டி என்று தனியான பாடம் இருக்க வேண்டும், அதற்கு தனியாக பாடம் நடத்த ஒருவர் இருக்க வேண்டும் கம்ப்யூட்டர் குறித்து சொல்லிக் கொடுக்க ஒருவர் இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் 1050 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி உள்ளது என்றும் தெரிவித்தார். ஐசிடி பாடத்தை இந்தியா முழுவதும் முறையாக நடத்துகின்றனர். ஆனால் தமிழகத்தில் அப்படி செய்யவில்லை என தெரிவித்த அவர், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் அவர்களை ஒரு மேனேஜராக வைத்திருக்கிறார்கள், மத்திய அரசு இந்தத் திட்டத்தை எதற்கு கொண்டு வந்தார்களோ அதற்கு நேர் எதிராக தமிழக அரசின் செயல் இருக்கிறது என தெரிவித்தார்.
மத்திய உயர்கல்வித்துறை அமைச்சர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம் என தெரிவித்த அவர், ICT பாடத்தை வழிநடத்துபவர் பிஎட் படித்திருக்க வேண்டும், இந்த திட்டத்தில் குளறுபடி செய்துவிட்டு மாநில அரசு பேசிக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.
பி எட் அமைப்பின் தலைவர் இதுகுறித்து பேசுவதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள் எனவும், இதற்கு முன்பு கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது எனவும், இன்று எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த பாதுகாப்பு இருக்கிறது எனவும் தெரிவித்தார். கூட்டணியில் இருக்கிறார், இல்லை என்று எல்லாம் பார்ப்பது இல்லை எனவும், அவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என பார்த்து மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்கிறது என தெரிவித்தார்.
எல்லா கட்சியினருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது போல தான் விஜய்க்கும் Y பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு கொடுத்துள்ளது எனவும்,விஜயால் ஆளுநரை சந்திக்க வர முடியவில்லை. பரந்தூர் மக்களை சந்திக்க செல்ல முடியவில்லை என பார்க்க முடிகிறது, மத்திய அரசின் ஏஜென்ஸிகள் இவற்றை கண்காணித்து ரிப்போர்ட் கொடுத்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
மாநில அரசு ஏன் தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை, பொது இடத்திற்குச் செல்லும் பொழுது பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் பொழுது , தமிழக முதல்வர் ஏன் இதை செய்யவில்லை என கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசை பொருத்தவரை எதிர்க்கட்சிகளுக்கு செய்திருக்கிறோம், நாம் மனிதர்களை மனிதர்களாக பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார். இதில் அரசியல் செய்து பார்த்தால் அவர்களுக்கு அரசியல் புரிதல் என்று இல்லை என அர்த்தம் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
நடிகர் விஜய் பாஜகவிற்கு எதிராகதான் கருத்து வைக்கிறார். இருந்தாலும் அவருக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கிறோம். இந்தியாவில் உள்ள ஒருவருக்கு , பொது இடத்தில் இருக்கும் ஒருவருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என தகவல் இருந்தால் பாதுகாப்பு கொடுக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநருக்கு இருக்கும் பிரச்சனை என்பது வேறு, இதில் என்னை எதற்கு முதல்வர் உள்ளே இழுத்தார் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, தமிழகத்தில் அண்ணாமலை இருக்க வேண்டும் ,ஆளுநர் இருக்க வேண்டும் என எதற்கு முதல்வர் பேசினார், ஆரம்பித்தது முதல்வர்தான், அதற்காகத்தான் நான் பேசுகிறேன் என தெரிவித்தார். கீழே விழுந்து சில பேருக்கு தலையில் அடிபட்டால் தான் புத்தி வரும் என முதல்வர் சொல்லியிருக்கிறார், இதை நான் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்கிறேன், தேர்தல் களத்தில் பார்க்கலாம் என தெரிவித்தார். திமுகவில் உள்ள அமைச்சர்கள் பெரும்பாலானோர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள், இதில் யார் இறக்குமதி செய்யப்பட்டவர்கள், சேகர்பாபுவும் அங்கிருந்து வந்தவர்தான் என தெரிவித்தார்.
தமிழகத்தில் தாமரை எங்கிருக்கிறது எனக் கேட்டார்கள். பெஸ்ட் தாமரை எனது பக்கத்தில் இருக்கிறார்கள் என வானதி சீனிவாசனை கட்டினார்.தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் வானதி என தெரிவித்தார். கடந்த தேர்தலில் ஏழு சதவீதம் வாக்கு திமுகவிற்கு கீழே போயிருக்கிறது, எதிர்க்கட்சி நண்பர்கள் பிளவு பட்டு கிடக்கிறார்கள் எனவும், திமுகவை அகற்ற வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள், அது நடக்க வேண்டும் என தெரிவித்தார். நான் உணர்ச்சிவசப்பட்டு யாரையாவது தவறாக பேசியிருக்கின்றேனா? திமுகவினர் உணர்ச்சி இல்லாமல் இருக்கின்றனர், இதை குற்றச்சாட்டாக வைத்தால் என்ன நியாயம்? என தெரிவித்த அவர், முதல்வர் கீழே இறங்க ஆரம்பித்து விட்டார், தேசிய ஜனநாயகக் கூட்டணி மேலே ஏற ஆரம்பித்திருக்கிறது எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சுகாதாரம் தரமானதாக இல்லை. நடிகர் கஞ்சா கருப்பை மிரட்டி பக்கின்றீர்களா. கஞ்சா கருப்பு சொன்னது பொய் என்பதை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்த அவர், ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்துவோம், சுகாதார துறை அமைச்சரை உட்காரவைத்து, அவருடன் நடிகர் கஞ்சா கருப்பு, நான், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைவரும் உட்கார்ந்து விவாதிக்கலாம் என தெரிவித்தார்.
குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவு தூண் வைக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்த வில்லை என சிவசேனா அமைப்பு குற்றம் சாட்டி இருப்பது குறித்த கேள்விக்கு , வானதி சீனிவாசன் தொடர்ச்சியாக இதற்கு குரல் கொடுத்து வருகிறார் என அண்ணாமலை பதில் அளித்தார். குரங்கு கையில் ஆப்பம் கொடுத்த கதையாக சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காக முதல்வர் பேசி வருகின்றார், 2026ல் சிறுபான்மையினர் முதல்வருக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் என தெரிவித்த அவர், அவர்கள் இருவரும் இந்த ஆட்சியை நமக்கு எதிரானது என முடிவு செய்துவிடுவார்கள், இலவசத்தை அள்ளி தெளித்தாலும் குரங்கு கையில் ஆப்பத்தை கொடுத்த பேலன்ஸ் செய்வது போல அவர்களை திமுக வைத்திருக்கின்றது என தெரிவித்தார். 2026 தேர்தலில் சிறுபான்மையும் பெரும்பான்மையையும் இணைந்து திமுகவை பின்னுக்கு தள்ளுவார்கள் என தெரிவித்த அவர், தமிழகத்தில் அரசியல் மாற்றம் வர வேண்டும் என்ற உறுதியில் பாஜக தெளிவாக இருக்கிறது, இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை, பிரதமர் மோடி எங்களை வழி நடத்துவார், தமிழகத்தில் பிரதமர் மோடி ஆட்சி அமையும் என தெரிவித்தார். சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் விவாதத்திற்கு தேதியும் நேரத்தையும் குறித்தால் விவாதத்திற்கு வர தயார் எனவும் அண்ணாமலை பதில் அளித்தார்.
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்த அவர், தமிழக முதல்வர் என்ன குட்டி கரணம் அடித்தாலும், பிரதமரின் வாக்குறுதியைத்தான் மக்கள் நம்புவார்கள் என தெரிவித்தார். மக்களுக்கு உதவி தொகை கொடுப்பதால், மக்கள் அடிமையாக இருப்பார்கள் என நினைத்தால் அது தவறு எனவும் தெரிவித்தார்.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!