சிங்காநல்லூர், சரவணம்பட்டியில் மேம்பாலம் அமைக்காததற்கான காரணம் என்ன?

published 2 years ago

சிங்காநல்லூர், சரவணம்பட்டியில் மேம்பாலம் அமைக்காததற்கான காரணம் என்ன?

 

கோவை : கோவையில் மெட்ரோ ரயில் இயக்குவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதால், சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டியில் மேம்பாலம் கட்டுவதற்கான டெண்டரை, தேசிய நெடுஞ்சாலைத்துறை இன்னும் இறுதி செய்யாமல் நிறுத்தி வைத்திருக்கிறது.

கோவையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முக்கியமான சாலைகளில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. அடுத்த கட்டமாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சிங்காநல்லுார், சரவணம்பட்டி, சாய்பாபா காலனியில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு ரூ.282.21 கோடியை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இதற்கான டெண்டர் கோரப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், இன்னும் டெண்டரை யாருக்குத் தருவது என இறுதி செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், வேலை துவங்கவில்லை.

இது தொடர்பாக விசாரித்தபோது, 'மெட்ரோ ரயில்' இயக்குவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதால், மேம்பாலப் பணிகளை நிறுத்தி வைக்கலாமா அல்லது இதற்கான நிதியை வேறு பணிக்கு மாற்றலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருவது தெரியவந்தது. இதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது, மேம்பால வேலைகளைச் செய்யாவிட்டால், நிதியைத் திருப்பி அனுப்ப அறிவுறுத்தியிருக்கும் தகவல் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, நுகர்வோர் அமைப்பினர் கூறியதாவது:
"மெட்ரோ ரயில் திட்டம் வேறு; மேம்பாலப் பணிகள் வேறு. சாலை மார்க்கமாகச் செல்லும்போது, சந்திப்புகளில் ஏற்படும் இடர்பாடுகளைத் தவிர்க்க, மேம்பாலங்கள் அவசியம். மெட்ரோ ரயில் திட்டத்துடன் இணைந்து, செயல்படுத்துவது சாத்தியம் இல்லாதது.

சிங்காநல்லுாரில் மேம்பாலம் கட்டுவதற்கு யோசிக்கும் அதிகாரிகள், ராமநாதபுரத்தில் கட்டும்போது ஏன் சிந்திக்கவில்லை?

மேம்பாலங்கள் கட்டுவதற்கு ஒதுக்கிய நிதியை, வேறு பயன்பாட்டுக்குச் செலவழிக்க, மத்திய அரசிடம் நெடுஞ்சாலைத்துறையினர் அனுமதி கேட்டிருக்கின்றனர். திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்பிருந்தால், நிதியைச் செலவழியுங்கள்.

இல்லையெனில், திட்டத்தை 'கேன்சல்' செய்து விட்டு, நிதியைத் திருப்பி அனுப்புங்கள் எனப் பதிலளிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மேம்பால வேலைகளை விரைந்து துவக்க வேண்டும்."

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe