நாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே, தென்னிந்தியாவிலும் நவராத்திரி மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் உள்ள உறவை மேம்படுத்தவும் அனைவரும் ஒன்றாக இணையவும் ஏற்ற நேரம் இது. 'நவ ராத்திரிகள்' அல்லது ஒன்பது இரவுகள் லட்சுமி, துர்கா மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் சமமாக அர்ப்பணிக்கப்பட்டாலும், கற்றல் மற்றும் அறிவின் தெய்வம் சரஸ்வதிக்குத் தென்னிந்திய மரபுகளில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நம் மாநிலத்திலும் நம் அண்டைய மாநிலங்களிலும் நவராத்திரியை எப்படி கொண்டாடுவாங்கனு இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கேரளா
நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஏழாவது நாளில், அதாவது துர்காஷ்டமி அன்று மாலையில் செய்யப்படும் 'பூஜை வைப்பு' என்னும் நிகழ்ச்சி மூலம் கொண்டாட்டங்கள் தொடங்கும். அடுத்த நாளான மகாநவமி அன்று மக்கள் சரஸ்வதி பூஜை அல்லது ஆயுத பூஜையை அனுசரிப்பார்கள். அதில் புத்தகங்கள், இசைக்கருவிகள் மற்றும் ஒருவரின் தொழில் தொடர்பான கருவிகள் வணங்கப்படுகின்றன. விஜயதசமியான அடுத்த நாளில், புத்தகங்கள் மற்றும் கருவிகள் அகற்றப்படுகின்றன. இது 'பூஜை எடுப்பு' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில்தான் ஒரு குழந்தைக்கு (2-6 வயதுக்குள்) கற்றல் அல்லது 'வித்தியாரம்பம்' ஆரம்பிக்கப்படுகிறது. மேலும் சடங்கின் ஒரு பகுதியாகக் குழந்தைகள் அரிசி அல்லது மணலில் எழுத்துக்களை எழுத வைக்கப்படுவார்கள்.
தமிழ்நாடு
தமிழகத்தில், திருவிழாவின் முதல் மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் துர்க்கைக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. கொலு எனப்படும் உருவங்கள் அல்லது பாரம்பரிய பொம்மைகள் வீடுகள், கடைகள் மற்றும் கோவில்களில் ஏற்பாடு செய்யப்படும். கொலுவிற்காக ஒரு தற்காலிக படியைக் கட்டி அதில் பல தலைமுறைகளாக இருந்து வரும் பொம்மைகள் வைக்கப்படுகின்றன.
இசை மற்றும் நடன விழாக்கள் கோயில்களிலும் சபாக்கள் அல்லது இசைக் கழகங்களிலும் ஏற்பாடு செய்யப்படும். தென் தமிழ்நாட்டின் பல கிராமங்களில் புலி கலி (புலி நடனம்) நடத்தப்படும். கலைஞர்கள் தங்களைப் புலிகளாகச் சாயம் பூசிக்கொண்டு வாத்தியங்களின் துடிப்புக்கு நடனமாடுவார்கள். காய் சிலம்பு ஆட்டம் எனக் கூறப்படும் நடன வகையும் இந்த காலத்தில் பரவலாகக் காணப்படும். இந்த நடனத்தில் கலைஞர்கள் கணுக்காலில் மணிகளை அணிந்து, கைகளில் கொலுசு அல்லது சிலம்புகளை வைத்து கோவில்களில் நடனமாடுவார்கள்.
கர்நாடகா
கர்நாடகாவில், அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளை வீடுகளில் வைத்து, தேங்காய், உடைகள் மற்றும் இனிப்புகளை தங்களுக்குள் பரிமாறிக் கொள்வார்கள். இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் உள்ள பல்வேறு கதைகளின் காட்சிகள் இயற்றப்பட்டு நாடகங்களாக நடத்தப்படும். உடுப்பியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். நவராத்திரியானது மைசூரில் தசரா-வாகக் கொண்டாடப்படுகிறது. இது சாமுண்டி மலையின் சாமுண்டீஸ்வரி தேவியை அல்லது மகிஷாசுரனைக் கொன்ற துர்கா தேவியின் அவதாரத்தைச் சித்தரிக்கும் ஒரு புராணக் காட்சியின் அரங்கேற்றம் ஆகும். தசராவின் போது மைசூர் அரண்மனை விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அங்குப் பிரபலமான ஊர்வலமான "ஜம்போ சவாரி" நடைபெறும். இது யானைகளின் அணிவகுப்போடு சாமுண்டீஸ்வரி தேவியை ஊர்வலமாகச் சுமந்து செல்லும் நிகழ்ச்சி ஆகும்.
தெலுங்கானா மற்றும் ஆந்திரா
தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இந்த ஒன்பது நாட்களும் பெண்மையைக் குறிக்கும் மகா கௌரிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ஒன்பது நாட்களும் பெண்கள் பூக்களைக் கொண்டு பூ அடுக்குகளை உருவாக்கும் 'பதுகம்மா பதுங்கா' என்ற சடங்கைச் செய்வார்கள். இந்த மலர் அடுக்கை இறுதி நாளில் நீர்நிலையில் மிதக்க விடுவார்கள். ஒன்பது நாட்களும் பெண்கள் பாரம்பரிய புடவை உடுத்தி, நகைகள் மற்றும் பிற அணிகலன்களை அணிந்து இந்த சடங்கைச் செய்வர்.
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி நிகழ்ச்சி இந்த ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4-ஆம் தேதி ஸரஸ்வதி பூஜை மற்றும் 5-ஆம் தேதி விஜயதசமியுடன் நிறைவடைகிறது.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!