நாளை ஆயுத பூஜை விழா: கடைகளில் பொருட்கள் வாங்கக் குவிந்த மக்கள்

published 2 years ago

நாளை ஆயுத பூஜை விழா: கடைகளில் பொருட்கள் வாங்கக் குவிந்த மக்கள்

 

கோவை: நாளை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பூக்கள், பழங்கள், பொரி, அவல், கடலை, சுண்டல் படைத்து வழிபடுவர்.

இதேபோல் அனைத்து நிறுவனங்களிலும் ஆயுதபூஜைப் பண்டிகைக் கொண்டாடப்படும். இதற்குத் தேவையான பொருட்களைக் கடந்த சில தினங்களாக மக்கள் வாங்கி வந்தனர். நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையிலுள்ள கடை வீதிகள், மார்க்கெட்டுகளில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மக்கள் சாமி கும்பிடுவதற்குத் தேவையான எலுமிச்சம்பழம், பொரி, அவல், கடலை, பனஓலை, மாவிலை, வாழைக்குலை, தேங்காய், மல்லி, செவ்வரளி, முல்லை, ரோஸ் என பல்வேறு வகையான பூக்களையும் தேர்வு செய்து வாங்கிச் சென்றனர்.

இதுதவிர ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளும் வாங்கினார்கள். ஆயுதபூஜை பண்டிகைக் காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் மற்ற நாட்களை விடச் சற்று உயர்ந்து காணப்பட்டது.

கோவை பூ மார்க்கெட்டில் விற்பனையான பூக்களின் விலை கிலோவில் வருமாறு:
மல்லிகைப்பூ- ரூ.800 முதல் 1000 வரை
ஜாதி மல்லி- ரூ.600
செவ்வந்தி- ரூ.400
ரோஜா- ரூ.360
அரளி- ரூ.350
தாமரை பூ ஒன்று- ரூ.20
கோழிக்கொண்டைப் பூ- ரூ.100
மருகு ஒரு கட்டு- ரூ.30
மரிகொழுந்து ஒரு கட்டு- ரூ.30
நந்தியாவட்டை- ரூ.200
சம்பங்கி- ரூ.350
செண்டுமல்லி- ரூ.80
வாடாமல்லி- ரூ.80

இதுதவிர பனை ஓலை ஒன்று ரூ. 5, வாழைக் குலை ஒன்று ரூ. 20, எலுமிச்சை ஒரு கிலோ ரூ.120 க்கும், வெள்ளை பூசணி ஒரு கிலோ ரூ. 40, தேங்காய் ரூ. 25 முதல் 30 வரையும், பொரி 1 பக்கா ரூ. 20க்கும், மாவிலை 1 கட்டு ரூ. 20க்கும் விற்பனையானது. சாத்துக்குடி ரூ.100, ஆரஞ்சு ரூ.150, மாதுளை ரூ.200, ஆப்பிள் ரூ.150, திராட்சை ரூ.120, கொய்யா ரூ.100-க்கும் விற்பனையானது.

இதேபோன்று கோவையிலுள்ள கடைவீதியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு மக்கள் சாமி கும்பிடுவதற்குத் தேவையான பூஜை பொருட்களையும் தேர்வு செய்து வாங்கிச் சென்றனர். இதேபோல் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளிலும் காலை முதலே மக்கள் கூட்டமாகக் காணப்பட்டது. அங்கு மக்கள் ஆயுதபூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

இதன் காரணமாகப் பல இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe