குறைந்தபட்ச போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.டி.சி தொழிலாளர்கள் போராட்டம்

published 2 years ago

குறைந்தபட்ச போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.டி.சி தொழிலாளர்கள் போராட்டம்

கோவை காட்டூரில் உள்ள என்.டி.சி அலுவலகம் முன்பு பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தினர் மூன்று மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், குறைந்தபட்ச திபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்.டி.சி எனப்படும் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமாக இந்தியா முழுவதும் 23 ஆலைகளும் தமிழகத்தில் 7 ஆலைகளும் உள்ளன. இந்தியா முழுவதும் 14  ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களும் தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் இந்த மில்களில் பணியாற்றி வரும் நிலையில், தொழிலாலர்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதனிடையே மூன்று மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், குறைந்தபட்ச திபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கோவையில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், சி.ஐ.டி.யு., ஹெச் எம் எஸ்., எம்.எல் எஃப்., ஐ.என்.டி.யு.சி., என்.டி.எல்.எஃப்.,  அம்பேத்கர் யூனியன், ஏ.டி.பி.,  ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 8 அமைப்புகளை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து என்.டி.சி.,யை காப்பாற்றுங்கள் ஒருங்கிணைப்பாளர் ராஜமணி கூறியதாவது :

தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான ஆலைகள் இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் 23 ஆலைகள் இயங்கி வந்தன. கொரோனா கால விதிவிலக்கு கொடுக்கப்பட்ட பிறகும் என்.டி.சி ஆலைகள் சட்டவிரோதமாக வேண்டுமென்றே இயக்கப்படவில்லை.

பாதி ஊதியம் மட்டும் கொடுத்துவந்தார்கள். முழு ஊதியம் கொடுக்க வேண்டும் அதுவரை மில்லை ஓட்டுகிற வரை ஆலைகளை இயக்க வேண்டும் என்று கூறினோம்.

கடந்த 10 மாதங்களாக பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படவில்லை. பாதி ஊதியமும் மூன்று மாதங்களாக கொடுக்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் குறந்தபட்ச ஊதியம் வழங்கப்படவில்லை.

என்.டி.சி.,க்கு ரூ.1 லட்சம் கோடி சொத்து உள்ளது. நிலம் விற்ற பணம் ரூ.2 ஆயிரம் கோடி வரவேண்டி உள்ளது. இதனை பெற்றுக் கொடுக்க அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும். கடந்த 29 மாதங்களாக தொழிலாளர்கள் சொல்லிலடங்கா துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

கல்விக்கட்டணம் செலுத்த முடியவில்லை, இ.எம்.ஐ உள்ளிட்ட எந்தவித கட்டணமும்செலுத்த முடியவில்லை. தொழிலாளர்கள் பசியால் வாடி வருகின்றனர்.  இதனால் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம்.

கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் கல்கத்தா உள்ளிட்ட  மாநிலங்களிலும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. சரியான முடிவு வரை கலைந்து செல்ல மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe