கோவை: தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன.
இதில் கிராமப்புறங்களை சுற்றி சுமார் 325 பெரிய தொழில்நிறுவனங்களும், மாநகராட்சி பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில் நிறுவனங்களும் உள்ளன. கோவையில் உள்ள இத்தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கோவையில் சிறு குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உள்ளனர். அவர்களது தொழில்நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர். ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்புசெட் உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள இயந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிப்பார்கள்.
அதேபோல் கோவை ராஜா வீதி, பெரியகடை வீதி, இடையர் வீதி, வைசியாள் வீதி, கெம்பட்டி காலனி, செட்டி வீதி, அசோக் நகர், அய்யப்பா நகர், செல்வபுரம், சலீவன் வீதி, காந்திபார்க், சாய்பாபா காலனி, கிராஸ்கட் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகைப்பட்டறைகளும், நகை தயாரிப்பு தொழிற்சாலைகளும் உள்ளன.
இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் கோவை மாவட்டத்தில் ஜவுளி தொழில்நிறுவனங்கள், நூற்பாலைகள், விசைத்தறி கூடங்கள் என ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான உள்ளூர் மற்றும் பிற மாவட்ட, மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதுதவிர ஐ.டி. நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், இதர அலுவலகங்கள் என பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தீபாவளியையொட்டி கடந்த ஒரு வாரத்தில் சொந்த ஊர் சென்றனர்.
குறிப்பாக கோவை ரயில்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளி மாவட்டங்களுக்கும், வடமாநிலங்களுக்கும் சென்றிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்கள் சென்றதால் ஒரு வாரம் வரை உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு எடுத்துள்ளனர்.
இந்நிலையில் விசைத்தறி, டெக்ஸ்டைல், ஆட்டோ மொபைல், பம்பு, கிரைண்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு மாதம் இருப்பு வைக்கும் அளவிற்கு பொருட்களை உற்பத்தி செய்துள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவையில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பலர் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்று விட்டனர். கட்டுமானம், ரயில்வே பொருட்கள் உற்பத்தி, இரும்பு நிறுவனங்கள், காஸ்டிங் நிறுவனம், ஏற்றுமதி நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக ரயில்களில் குவிந்தனர். சில தொழில் நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்களுக்காக டிராவல்ஸ் பஸ்களை ஏற்பாடு செய்து அனுப்பியது. தொழிலாளர்கள் அதிகளவு விடுப்பு எடுத்துவிட்டதால் சில தொழில் நிறுவனங்கள் தீபாவளிக்கு பின்னர் தொழிலாளர்கள் வரும் வரை இயக்கத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
இதனால் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இது குறித்து தொழில் துறையினர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பெரும்பாலான உற்பத்தி தொழில் நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வடமாநிலத்தில் இருந்து வந்து தங்கி வேலை செய்கிறார்கள்.
இவர்கள் தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றுவிட்டனர். ஒரு வாரம் கடந்த பின்னர்தான் வருவார்கள்.
இவர்கள் சென்று வருவதற்கான டிக்கெட் மற்றும் பண்டிகை செலவுக்கான தொகை, போனஸ் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறோம். சிலர் பண்டிகை முடிந்த பின்னர் திரும்ப வருவதில்லை. 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
அவர்களும் சொந்த ஊர் சென்றுவிட்டனர். இவர் திரும்பி வர குறைந்தது ஒருவாரமாவது ஆகும். சிலர் வந்தாலும் வேறு நிறுவனங்களுக்கு பணிக்கு சென்று விடுவார்கள். எனினும் புதிய தொழிலாளர்கள் தீபாவளி முடிந்து அதிக அளவில் பணிக்கு வருவார்கள் என நம்பிக்கை உள்ளது என்றனர்.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!