காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம்: சைக்கிளில் சென்று திருமணம் செய்துகொண்டவரின் அடுத்த முயற்சி

published 1 year ago

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம்: சைக்கிளில் சென்று திருமணம் செய்துகொண்டவரின் அடுத்த முயற்சி

கோவை: பசுமையை பேணிக்காக்க வலியுறுத்தியும், புவி வெப்ப மயமாதலை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை இளைஞர் ஒருவர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,200 கிலோ மீட்டர் விழிப்புணர்வு சாதனை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவசூரியன் செந்தில்ராமன் (28). கெமிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் இந்த மாதம் 3-ஆம் தேதி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சாதனை விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார்.

அங்கிருந்து அவர் கடந்த 24 நாட்களாக பயணம் மேற்கொண்டு நேற்று முன்தினம் கோவை வந்தார். இன்று கோவை ராஜ வீதியில் அவருக்கு கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் கீதா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது இந்த பயணம் குறித்து சிவசூரியன் செந்தில் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:- 

"புவி வெப்பமயமாதலை தடுக்கவும், பசுமையை காக்கவும் வலியுறுத்தி நான் தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறேன். இதேபோல் கடந்த 2021-ஆம் ஆண்டு குஜராத்தில் இருந்து கோவைக்கு 1920 கிலோ மீட்டர் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளேன்.

கடந்த ஆண்டு எனக்கு குருவாயூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. அதற்காக கோவையிலிருந்து 150 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் குருவாயூர் சென்று திருமணம் செய்தேன். பசுமையை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். பசுமை இந்தியாவை ஏற்படுத்தவும், புவி வெப்பமயமாதலை தடுக்கவும் தமிழக அரசு இளைஞர்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்த வேண்டும்." 

இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து வருகிற வெள்ளிக்கிழமை அவர் கோவையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி தனது விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தொடரவுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe