கோவையில் இருந்து கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது: எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு..

published 1 year ago

கோவையில் இருந்து கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவது  அதிகரித்துள்ளது: எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு..

கோவை: திமுக ஆட்சியில் கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்..

கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்குப் பேட்டிளித்தார். அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தித்து பல்வேறு திட்டங்களை துரிதமாக மேற்கொள்ள  வேண்டும் என வலியுறுத்தினோம். ஆட்சியரிடம் கோவையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை எடுத்துரைத்தோம்.

கோவை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை திமுக ஆட்சியில் அதிகமாகி இருக்கிறது. வாளையார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதி வழியாக கனிமவளங்கள் விதிகளை மீறி கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. அரசிற்கு பணம் செலுத்தாமல் போலியாக ரசீது அடித்து கனிமவளங்கள் கடத்தப்படுகின்றது.

திமுக அரசு நிறைய பேரை நியமித்து பணம் வசூல் செய்து வருகிறது. ஒரு யூனிட்டுக்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்கிறார்கள். தினமும் 5 ஆயிரம் லோடு கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. இன்று மோசமான ஆட்சி நடக்கிறது.

கனிம வளங்கள் கடத்தி செல்வதை ஏற்க முடியாது. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கனிம வளங்கள் கடத்துபவர்களிடம் முதலமைச்சர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசூல் செய்வதாக கூறப்படுகிறது.
கோவை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


நீதிமன்ற வளாகத்திற்குள் பெண் மீது ஆசிட் வீச்சு, கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. காவல் துறை செயல்படவில்லை.

சிறுவாணி ஆற்றில் தடுப்பணைகள் கட்டுவதை திமுக அரசும், மாவட்ட நிர்வாகமும் தடுத்து நிறுத்தவில்லை. தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு எந்த புதிதாக திட்டங்களையும் தரவில்லை.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை வேகமாக முடிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் எந்த வேலையும் செய்யவில்லை. கொப்பரை தேங்காய் விலை குறைவாக உள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை உள்ளது.

கொப்பரை தேங்காய் விலை உயர்த்த வேண்டும். ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் விதிமுறைக்கு உட்பட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டுப்பாளையம் பகுதியில் மழையால் சேதமடைந்த வாழைகளுக்கு போதிய நிவாரணம் தர வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வழங்குவதில் குளறுபடிகள் உள்ளது. சீராக குடிநீர் வழங்க வேண்டும்.

அத்திக்கடவு அவிநாசி திட்டம், மேம்பாலங்கள் ஆகிய வேலைகளை வேகமாக முடிக்க வேண்டும். வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பராமரிப்பு இல்லாததால் 20 கி.மீ. துர்நாற்றம் வீசுகிறது. வெள்ளலூர் பேருந்து நிலையம் சுயநலத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe