கோவை: கோவை வெள்ளலூர் இடையர்பாளையம் பைபாஸ் சாலை அருகில் பாஜக சார்பில் மூன்றாம் ஆண்டு மோடி ரேக்ளா திருவிழா எனும் தலைப்பில் ரேக்ளா பந்ததம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராதிகா கலந்து கொண்டு ரேக்ளா பந்தய பாதையை மாட்டு வண்டியில் சென்று பார்வையிட்டார். மேலும் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் .இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் மோடி ரேக்ளா திருவிழாவில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மக்கள் காளைகளை தெய்வமாக பார்க்கிறார்கள் என்றும், குழந்தைகளாக வளர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழக விளையாட்டுக்கு நாம் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும் என்றும், நான் உழவன் மகன் படத்தில் நடிக்கும் போது இதுபோன்ற ரேக்ளா பந்தயம் நடைபெற்றது, அப்பொழுது இருந்து இப்போது வரை மக்கள் இதை ரசிக்கிறார்கள் என்பதே பெருமையாக உள்ளது, இதை பிரதமரிடம் கூறினால் நிச்சயம் அவர் இதை கவனிப்பார் என்றார். பிரதமருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டவர் என தெரிவித்தார்.ஈ.சி.ஆரில் நடந்த சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் அது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம். இதற்கு காவல் துறையும் மாநில அரசும் செயல்பட்டு இதைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு பணி வழங்க வேண்டும் என கூறினார். மத்திய பட்ஜெட் குறித்தான கேள்விக்கு மிடில் கிளாஸ் மக்களுக்கு மிகவும் பயன் உள்ள ஒரு பட்ஜெட்டாக இருந்தது என தெரிவித்தார்.
தமிழக அரசியல் களம் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த ராதிகா, அரசியல் பேசுவதற்கு நிறைய பேர் உள்ளார்கள் என்றும நான் இங்கு ரேக்ளா பந்தயத்தை பார்க்கவே வந்து இருக்கிறேன், இருந்தாலும் அவரவர்கள் அவர்களுடைய perspective கருத்துக்களை முன் வைக்கிறார்கள். அது சரி தவறு என்று கூறுவதற்கு அனைவருக்குமே உரிமை உள்ளது என்றார். பெரியார் பற்றிய சர்ச்சைகள் செய்திகளை நானும் பார்த்தேன் என்றும், அது அவருடைய கருத்து அவர் என்றார். மக்களுக்கு நன்றாக தெரியும் எது சரி தவறு என்று. எந்த கட்சி ஜெயிக்க வேண்டும் என்பது மக்களுக்கு முன்னரே தெரியும். பெரியாரின் கருத்துக்களை நான்கு நாடகங்களில் கூறி விடுவேன் என்ற எம்.ஆர்.ராதாவின் கருத்துக்கு, என் தந்தையை பொறுத்தவரை சீர்திருத்த கருத்து, பெண்ணுரிமை போன்றவைகளை நாடகங்களில் நான் பார்த்து இருக்கிறேன். அவர் அப்பொழுது கூறிய விஷயமும் இப்பொழுது வரக் கூடிய காணொளியும், கருத்து மாறுபட்டவையாக உள்ளது என தெரிவித்த அவர் அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். ஜல்லிக்கட்டு ரேக்ளா போன்றவைகளை தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்துகிறார்களே என்ற கேள்விக்கு, அது நல்ல விஷயம் தானே, அரசியல் கட்சிகள் எதற்காக இருக்கிறார்கள்? மக்களுக்காக இருக்கிறார்கள்.. இதுபோன்ற நல்லவைகளை எந்த கட்சி செய்தாலும் வரவேற்கலாம் என்றார்
தமிழக வெற்றி கழகம் இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்தது குறித்த கேள்விக்குவிஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.இந்நிகழ்வில் மேடையில் உரையாற்றிய அவர், கொங்கு நாட்டுக்கு இது ஒரு பெருமை எனவும், மதுரைக்கு எப்படி ஜல்லிக்கட்டு பெருமையோ இங்கு இந்த பெருமை தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்த ஆண்டு போட்டிக்கு பிரதமரை அழைத்து வருவதாக என்னிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இந்த காலத்து பிள்ளைகள் எல்லாம் செல்போனையே நோண்டிக் கொண்டிருப்பதாகவும் இது போன்ற விளையாட்டுகளை நடத்தினால் ஒரு நல்ல விஷயம் என கூறினார். தற்பொழுது அதிகமாக கொலை கொள்ளை கற்பழிப்பு என்று கூறும் பொழுது காலம் மாறிவிட்டதோ என்று தோணுவதாகவும் ஆனால் இங்கு வந்து இது போன்ற விஷயங்களை பார்க்கும் பொழுது நம்முடைய கலாச்சாரத்தை மதிக்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் அதை வெளிக்கொண்டு வருகிறார்கள் என தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டு என்று கூறினாலே நாங்கள் அனைவரும் ரெடி. மக்களும் அதற்கு ரெடி அது எதற்கு என்று 2026 நாம் பார்க்கப் போகிறோம் என தெரிவித்தார்.