காதலி வர மறுத்ததால் கோவையில் வாலிபர் தற்கொலை

published 1 year ago

காதலி வர மறுத்ததால் கோவையில் வாலிபர் தற்கொலை

கோவை: கோவையில் காதலி தன்னுடன் வரமறுத்ததால் மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்டம் பேரையூர் டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் முகமத் ஹரூன்(56). இவரது மகன் இம்ரான்கான்(26). கூலித் தொழிலாளி. இந்நிலையில், இம்ரான்கானுக்கு தனது நண்பர் ஒருவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. 

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் அந்த ஜோடியை கண்டித்தனர். 

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையில், இம்ரான்கானின் காதலி மட்டும் குடும்பத்தினரை பிரிந்து கோவைக்குத் தனியாக வந்தார். அவர் உக்கடம் பகுதியில் வீடு எடுத்து தங்கியதாக தெரிகிறது. இதற்கிடையே தனது காதலியை மறக்க முடியாமல் இம்ரான்கான் தவித்து வந்தார். 

இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இம்ரான்கான் தனது காதலியை சந்தித்து தன்னுடன் அழைத்துச் செல்ல கோவை வந்தார்.

பின்னர் அவரை நேரில் சந்தித்து தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு அவர் உடன்படவில்லை. அவருடன் மதுரைக்குச் செல்ல மறுத்து விட்டார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் இம்ரான்கான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனையறிந்த அவரது தந்தை முகமத் ஹரூன் தனது மகனை அழைத்துச் செல்ல கோவை வந்தார். 

பின்னர் இருவரும் உக்கடம் பஸ் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து சிங்காநல்லூர் சென்று மதுரை செல்வதற்காகப் புறப்பட்டனர். அப்போது உக்கடம் பஸ் நிலையத்தில் வைத்து இம்ரான்கான் அவரது தந்தைக்கு தெரியாமல் மதுவில் விஷம் கலந்து குடித்தார். பின்னர் இருவரும் பஸ்சில் ஏறி மதுரைக்குச் சென்று கொண்டிருந்தனர்.

மதுரை அருகே செல்லும் வழியில் இம்ரான்கான் விஷம் குடித்த விவரத்தைத் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை தனது மகனை உடனடியாக பேரையூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தார். டாக்டர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

காதல் மோகத்தால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe