இது சாலையா இல்லை ஓடையா? கோவையில் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பொதுமக்கள்..!

published 1 year ago

இது சாலையா இல்லை ஓடையா? கோவையில் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பொதுமக்கள்..!

கோவையில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் பொழுதும் சலீவன் வீதியை சுற்றி வசிக்கும் சாலைகளில் மழை வெள்ளம் தேங்குவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஸ்மார்ட் சிட்டியான கோவையை அழகுபடுத்தும் நோக்கிலும், மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கவும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அடிப்படை வசதிகளான மழை நீர் வடிகால், சுகாதாரமான வீதிகளை உறுதி செய்வதில் மாநகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டி வருகிறது.

இதனிடையே கோவையில் வெள்ளிக்கிழமை மதியம் சுமார் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் கோவையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. குறிப்பாக மேம்பாலங்களின் கீழ் பகுதியில் மழை நீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கோவையின் மையப்பகுதியான லங்கா கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழை  நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து கழிவு நீர் அகற்றும் லாரிகள் மூலமாக நீர் உறிஞ்சப்பட்டது. இதேபோல் செல்வபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள சலீவன் வீதி, தெலுங்கு வீதி மற்றும் தெலுங்கு பிராமணர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் சாலைகளில் மழை  நீர் ஆற்று நீர் போல் ஓடும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாய்களைத் தூர்வாருவதில்லை என்றும், கட்டிடக்கழிவுகள் சாக்கடையில் கொட்டப்படுவதால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பிரச்சனையில் சிக்கித் தவிப்பதாகவும், மழை நேரங்களில் நடமாடவே முடியாத நிலை நீடித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த பகுதியில் சாக்கடைகளை தூர்வாரி மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe