வெளியே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டபடியே உங்கள் மொபைல் ஃபோனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
திடீரென உங்கள் மொபைல் திரையில், ஃபோன் மிகவும் சூடாகிவிட்டது, அதனால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது என்ற செய்தி பளிச்சிடுகிறது.
இன்ஸ்டாகிராம் இல்லாமல் இப்போது என்ன செய்வீர்கள்?
நண்பர்களோடு பேசுவீர்களா? காலாற நடந்து உங்கள் பகுதியைச் சுற்றிப்பார்பீர்களா?
மனிதர்களைப்போல மொபைல் ஃபோன்களுக்கு வேர்க்காது.
அது நமக்கு நல்லது, ஆனால் ஃபோன்களுக்கு நல்லதல்ல.
மின்னணு சாதனங்கள் ஏன் சூடாகின்றன? இதை எப்படித் தடுப்பது?
செல்ஃபோன் சூடானால், வேகம் குறையும்
அதிக வெப்பத்தில் நாம் வேகமாக வேலை செய்யத் திணறுவது போலவேதான் மொபைல் ஃபோன்களுக்கு உள்ளே இருக்கும் ப்ராசஸர்களும்.
ப்ராசஸர் என்பது மொபைல் ஃபோன்களுக்கு உள்ளிருக்கும் ஒரு ‘சிப்’ (chip). ஃபோனின் முக்கியமான செயல்பாடுகளை இதுதான் இயக்குகிறது.
“மின்னனு சாதனங்களின் இயங்க வைக்கும் உள்பாகங்கள், அவற்றின் செயல்பாட்டின் மூலமே வெப்பத்தை உண்டாக்குகின்றன,” என்கிறார் இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பெக்கெட் பல்கலைகழகத்தின், மின்னணு பொறியியல் பேராசிரியரான ராஸ் வ்யாட் மில்லிங்க்டன்.
“இந்த சிப்கள் சூடாகும்போது, மேலும் சூடாவதைத் தடுக்கும் வகையில் மொபைல் இயங்கும் வேகத்தைக் குறைத்து விடுகிறது,” என்கிறார்
பேட்டரி சார்ஜ் சீக்கிரம் குறைவது ஏன்?
அதிக வெப்பத்தில் நாம் வேகமாக வேலை செய்யத் திணறுவது போலவேதான் மொபைல் ஃபோன்களுக்கு உள்ளே இருக்கும் ப்ராசஸர்களும்
மின்னணு சாதனங்கள் பொதுவாக 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் இயங்குமாறு வடிவமைக்கப் பட்டிருக்கின்றன என்கிறார் பேராசிரியை ராஸ்.
“பேட்டரிகள் ஆற்றலைச் சேமித்து வைக்கின்றன. அவை குறிப்பிட்ட வெப்பநிலையில் வேலை செய்யுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அவை சூடாகச் சூடாக, அவற்றின் வேலைப்பளு அதிகரிக்கிறது. இதனால் அவை அதிக ஆற்றலைச் செலவிடுகின்றன,” என்கிறார்.
இதனால் பேட்டரிகள் விரைவாக சார்ஜ் இழக்கின்றன. அவற்றைக் குளிர்விப்பதும் கடினமாகிறது.
அதேபோல், நாம் வெளியே சூரிய வெளிச்சத்தில் இருக்கும்போது, நமது மொபைல் திரைகளின் வெளிச்சத்தைக் கூட்டுகிறோம். இதுவும் பேட்டரிகளின் செயல்பாட்டை பாதிக்கலாம், என்கிறார்.
மொபைல் திரை ஏன் பாதிக்கப்படுகிறது?
உங்கள் மொபல்ஃபோனின் திரை திடீரென மாறியிருக்கிறதென்றால், வெப்பம் ஒரு காரணமாக இருக்கலாம்.
“குறிப்பாகப் பழைய ஃபோன்களில் ஒரு சிறிய சேதம் இருந்தால், வெப்பம் அதனைப் பெரிதாக்கிவிடும்,” என்கிறார் ராஸ்.
அதேபோல் நாம் மொபைல் திரைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் ‘tempered glass’ கவர்கள் உள்ளே அதிக வெப்பத்தைத் தேக்கி வைக்கின்றன, என்கிறார்.
மொபைல் ஃபோன்கள் சூடாகாமல் பாதுகாப்பது எப்படி?
நேரடியாக வெய்யில் படும் இடங்களில் மொபைல் ஃபோன்களை வைக்காதீர்கள்
- அதிகமாக சார்ஜ் போடாதீர்கள் – சூடாக இருக்கும் ஃபோனை சார்ஜ் செய்தால், அது மேலும் வெப்பத்தை உண்டக்கும்.
- வெயில் படும் இடத்தில் வைக்காதீர்கள் – நேரடியாக வெய்யில் படும் இடங்களில் மொபைல் ஃபோன்களை வைக்காதீர்கள். குறிப்பாகக் கார்களில் அவற்றை வைத்துவிட்டுச் செல்லாதீர்கள். முடிந்த அளவுக்கு அவற்றை நிழலில் வையுங்கள். முடிந்தால் ஒரு ஃபேனுக்குக் கீழே வையுங்கள்.
- ஃபோனை இலகுவாக வையுங்கள் – உள்ளேயும் வெளியேயும். அதை கவரிலிருந்து வெளியே எடுத்து வையுங்கள்.
- தேவையற்றச் செயலிகளை நிறுத்திவிடுங்கள். “உதாரணமாக நீங்கள் ஜி.பி.எஸ் பயன்படுத்தவில்லையெனில், வேறேதாவது செயலியைப் பயன்படுத்தவில்லையெனில், அவற்றை நிறுத்திவிடுங்கள். ஏனெனில், குறைவான செயலிகளைப் பயன்படுத்தினால், குறைவான ஆற்றலைப் பயன்படுத்துகிறீர்கள். அதனால் உங்கள் மொபைல் ஃபோன் குறைவான வெப்பத்தை உண்டாக்கும்,” என்கிறார் ராஸ்.