ஷவர் வசதி - பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு!

published 1 year ago

ஷவர் வசதி - பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு!

கோவை : கோவை மாவட்டம் பேரூரில் உள்ள பட்டீஸ்வரர் கோவில் அருகே, நொய்யல் ஆற்றங்கரையில் தர்ப்பண மண்டபம் உள்ளது. இது காசிக்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்பெற்றது. பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் கொடுத்து விட்டு, நீராடியபிறகு பட்டீஸ்வரரை வழிபட்டால் முன்னோரின் ஆன்மா சாந்தி அடையும் என்று ஐதீகம். எனவே தமிழகம் மட்டு மின்றி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் பேரூர் வந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு செல்கிறார்கள். 

இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வருகிறது. நாளையும் (17-ந் தேதி), ஆகஸ்டு 16-ந் தேதியும் வருகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தர்ப்பண மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பேரூர் நொய்யல் ஆற்றில் தற்போது நீர்வரத்து இல்லை. எனவே ஆற்றங்கரைகள் வறண்டு காட்சி அளிக்கின்றன. ஆடி அமாவாசை நாளில் முன்னோருக்கு திதி கொடுக்கும் பக்தர்கள், நீராடியபிறகு பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். 

இதனை கருத்தில் கொண்டு பேரூர் தர்ப்பண மண்டபம் அருகிலுள்ள ஆற்றங்கரையோரத்தில், பக்தர்களின் வசதிக்காக பைப்லைன் அமைத்து பிரத்யேக ஷவர் வசதி ஏற்படுத்தி தருவது என்று பேரூர் பேரூராட்சி நிர்வாகம் முடிவுசெய்து உள்ளது. இதற்காக அங்கு பைப்லைன்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதன்மூலம் பேரூருக்கு தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்கள், 

நொய்யல் ஆற்றங்கரையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள ஷவரில் ஆனந்தமாக நீராடிவிட்டு பட்டீஸ்வரரை வழிபட்டு திரும்ப இயலும். பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களின் வசதிக்காக பிரத்ேயக ஷவர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டு இருப்பது, பக்தர்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் ஆடி அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மேலும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. 

இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசையை முன்னிட்டு பேரூருக்கு திரண்டு வருவர். எனவே பக்தர்களின் வசதிக்காக காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். 

நொய்யல் ஆற்றுக்கு சித்திரைச்சாவடி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. எனவே பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு அங்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்படி செய்தால் ஆடி 18 அன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் நொய்யல் ஆற்றில் நீராடி இறைவனை மகிழ்ச்சியாக வழிபட இயலும். எனவே மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை நிர்வாகமும் ஒருங்கிணைந்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறந்து விட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe