கோவை மக்களே அவுட்டிங் போக ரெடியா? மங்களம் அணைக்கு போகலாம் வாங்க..!

published 1 year ago

கோவை மக்களே அவுட்டிங் போக ரெடியா? மங்களம் அணைக்கு போகலாம் வாங்க..!

கோவை: இந்த வார இறுதி நாட்களில் ஃபேமிலி & ஃப்ரெண்ட்ஸ் கூட நல்லதா ஒரு ஸ்பாட்க்கு போலாம்னு யோசிச்சுட்டு இருக்கீங்களா..? உங்களுக்காகவே தான் இந்த செய்தி தொகுப்பு.

பாலக்காட்டில் இருக்கும் இரண்டாவது பெரிய அணை தான் மங்களம் அணை. இந்த அணை கோவையில் இருந்து ஒரு நாள் சென்று வர ஏற்ற இடம். மங்களம் அணை நம்ம கோவையில் இருந்து 95 கிமீ தொலைவிலும் பாலக்காட்டிலிருந்து 41 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மங்கலம் ஆற்றின் கிளை நதியான செருகுன்னபுழா ஆற்றின் மீது இந்த மங்கலம் அணை கட்டப்பட்டுள்ளது. இது பாலக்காட்டில் இருக்கும் பிரபலமான சுற்றுலா தளமாகும்.

மங்களம் அணை அமைக்க கடந்த 1953-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 1957-ஆம் ஆண்டு அணை கட்டும் பணிகள் தொடங்கியது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அணையின் கட்டுமானப் பணிகள் 1966-ஆம் ஆண்டு நிறைவடைந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இந்த அணை வடக்கஞ்சேரி நகரிலிருந்து 13 கி.மீ தொலைவில் ஆலத்தூர் தாலுகாவில், ஆலத்தூர் - வடக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

மங்களம் அணையை சுற்றியுள்ள முழுப் பகுதியும் அழகிய பூங்காக்கள் மற்றும் புல்வெளிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரப்பர், மிளகு, காபி, மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளன. அணையை சுற்றியுள்ள வனப்பகுதியில் மான், யானை மற்றும் பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. 

அணை அமைந்துள்ள இடத்தில் எந்த நேரமும் ‘கீச்சிடும்’ பறவை கூட்டங்கள் ஒரு வித மன அமைதியை கொடுப்பதாக உள்ளது. நீர் நிலையுடன் கூடிய கண்களுக்கு விருந்தளிக்கும் பசுமை சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு மிகவும் பொருத்தமான இடம் இந்த மங்களம் அணை.

இந்த அணையை சென்றடைய அருகிலுள்ள ரயில் நிலையங்கள்:

பாலக்காடு (தொலைவு-41 கிமீ), ஒட்டப்பாலம் ரயில் நிலையம் (50 கி.மீ) 

அருகிலுள்ள விமான நிலையம்:

கொச்சி சர்வதேச விமான நிலையம் (100 கிமீ) கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் (115 கிமீ), கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் (150 கி.மீ)

சாலை வழியாக செல்வோருக்கு அணையின் பிரதான நுழைவு வாயில் வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கார் அல்லது டாக்ஸியில் செல்வோர் அணையின் நுழைவு வாயிலில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பார்க்கிங் இடம் வரை செல்லலாம்.

இத்தனை அம்சங்களும் உடைய மங்கலம் அணைக்குள் நுழைய விதிக்கப்படும் கட்டணம் தான் 'அல்டிமேட்'. ஏனென்றால் இதற்கு நுழைவு கட்டணமாக 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe