கோவை மக்களே சமையல் எண்ணெய், தானியங்கள் விலை உயர வாய்ப்பு : மத்திய-மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

published 1 year ago

கோவை மக்களே சமையல் எண்ணெய், தானியங்கள் விலை உயர வாய்ப்பு : மத்திய-மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கோவை: உக்ரைன் - ரஷ்யா இடையே போர் துவங்கி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. உலக அளவில் கோதுமை, பார்லி, சோளம், சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் உக்ரைன் மற்றும் ரஷ்யா மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இதன் காரணமாக உலகம் முழுவதும் பெரியளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது. 

இந்த போரின் காரணமாக உக்ரைனின் தானிய ஏற்றுமதி முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாகக் கருங்கடல் பகுதியிலிருந்து உக்ரைன் தானியம் ஏற்றுமதி செய்ய முடியவில்லை.

 இதன் காரணமாக உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்பட்டது. உலக அளவில் தானியங்களின் விலை உயர்வுக்கும் இதே காரணம் எனப் பல பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

உக்ரைன் துறைமுகங்களில் பல மில்லியன் டன் கோதுமை மற்றும் பிற தானியங்கள் தேங்கிக் கிடந்து தானியங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஐ.நா. சபையின் சார்பாக ரஷ்யா உக்ரைன் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை அடுத்து ரஷ்யா தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக உக்ரைன் தானிய ஏற்றுமதியைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுமதித்தது. 

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து தானிய ஏற்றுமதி துவங்கியது. இதன் காரணமாக உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஒர் அளவு குறைந்தது. 

இதனிடையே ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என கூறப்படுகிறது. உலக நாடுகள் பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என ரஷ்யா கோரிக்கை விடுத்தது. உலக நாடுகள் அதனைக் கண்டுகொள்ளவில்லை. 

இதனால் கருங்கடல் வழியாகத் தானியம் ஏற்றுமதிக்காக ஏற்படுத்தப்படுத்தப்பட்ட வாக்குறுதிகள் நிறுத்தப்படும். உக்ரைன் தானிய ஏற்றுமதிகளை செய்யமுடியாத நிலை வரும் என ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதன் காரணமாக மீண்டும் சமையல் எண்ணெய், தானிய வகைகளின் விலை உயர வாய்ப்புள்ளது.  

இதுகுறித்து வணிகர்கள் கூறியதாவது:

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்ற போரின் காரணமாக உலக அளவில் எண்ணெய் வித்துகள், தானியங்கள் போன்றவற்றின் தட்டுப்பாடு அதிகரித்தது. இதன் காரணமாக விலை உயர்வும் ஏற்பட்டது. 

உக்ரைன் தானிய ஏற்றுமதியைத் துவங்கியதும் தானியம் உள்ளிட்டவைகளின் விலை குறைந்தது. ஆனால் மீண்டும் தீவிரமாகம் போர் பதற்றம் காரணமாக, கருங்கடல் வழியாக உக்ரைன் ஏற்றுமதிகளைத் தொடர முடியவில்லை என்றால் மீண்டும் சமையல் எண்ணெய், தானியங்களின் விலைகள் உயர வாய்ப்புள்ளது. 

ஒன்றிய, மாநில அரசுகள் இதற்கான முன்னேற்பாடுகளை எடுத்து விலை உயராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: 

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்ற போரின் காரணமாகச் சமையல் எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்தது. ரூ.120ல் இருந்து ரூ.200 வரை உயர்ந்து அன்றாட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

அதே போல் தானிய வகைகளின் விலையும் உயர்ந்தது. அதன் பின் சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை குறைந்தது. எனினும் விலைவாசி உயர்வினால் மிடில் கிளாஸ் மற்றும் ஏழை, எளிய குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஒன்றிய, மாநில அரசுகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கோவையில் ரங்கே கவுடர் வீதி, தயாகி குமரன் வீதி, கருப்ப கவுண்டர் வீதி போன்றவைகள் தானியங்களுக்கு மொத்த மார்கெட்டாகவும், சில்லறை விற்பனைக்கும் பெயர் போனதாகும். கோவை மாவட்ட மக்கள் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களும், கேரளா மாநில வியாபாரிகளும் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள். 

கடந்த சில மாதங்களாகவே விலை வாசி உயர்வு காரணமாகக் காரணமாக கோவை மார்கெட்டுகளில் விற்பனை குறைந்துள்ளது. 

மேற்கொண்டு விலை உயர்ந்தால் வியாபாரம் முற்றிலும் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்தி, மேற்கொண்டு பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe