கோவையில் என் மண் என் மக்கள் ஒரு சொகுசு பயணம் அல்ல- வானதி சீனிவாசன் பேட்டி

published 1 year ago

கோவையில் என் மண் என் மக்கள் ஒரு சொகுசு பயணம் அல்ல- வானதி சீனிவாசன் பேட்டி

கோவை : கோவை திருச்சி சாலையில் உள்ள ஹைவேஸ் காலனி பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில்  பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அங்கன்வாடி கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சட்ட மன்ற உறுப்பினர் நிதி அதிகமாக அங்கன்வாடி மையங்கள் கட்டவும், புதுப்பிக்கவும் அளித்துள்ளோம். 

என் மண், என் மக்கள் யாத்திரைக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. மக்களின் கருத்துகளை, குறைகளைக் கேட்டறிய நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இளைஞர்கள் அதிகமாக யாத்திரையில் கலந்து கொள்வது உற்சாகம் அளிக்கிறது.

இது நடைப்பயணம் என எங்கும் சொல்லவில்லை. மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள இடங்களில் நடைப்பயணமாகவும், மற்ற இடங்களில் வாகனங்களில் செல்வதுமாக இப்பயணம் நடந்து வருகிறது. நடந்து சென்றால் குறிப்பிட்ட நாட்களில் பயணத்தை முடிக்க முடியாது. வாகனத்திலிருந்தபடி அண்ணாமலை மக்களுடன் உரையாடி வருகிறார். இது சொகுசு பயணம் அல்ல. எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் வாகனத்தில் தான் பயணம் செய்து வருகின்றனர். மின் கட்டண உயர்வு வீட்டில் உள்ள ஒவ்வொரு நபரையும் பாதித்துள்ளது. புதிதாக மின் திட்டங்களில் தமிழக அரசு முதலீடு செய்யவில்லை. வெளிச் சந்தையிலிருந்து அதிக விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. இந்த சுமையை நுகர்வோர் தலையில் தமிழக அரசு சுமத்துகிறது. 

மின் கட்டணம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்றார்கள். ஆனால் அதற்கு மாற்றாக தற்போது நடந்து கொண்டு இருக்கிறார்கள். மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திராவிட மாடல் என்பது யூ டர்ன் அடிக்கும் மாடலாக உள்ளது. மின் கட்டணத்தைத் தமிழக அரசு குறைக்க வேண்டும். சீமான் நன்றாகப் பேசக்கூடியவர். கதை, வசனம் எழுதி திரைப்படம் எடுக்கக்கூடியவர். அவரது கருத்திற்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.  ஆ.ராசா குறிப்பிட்ட மக்களை, பெண்களை இழிவுபடுத்திப் பேசுவது முதல் முறையல்ல. அது தான் திமுகவின் பராம்பரியம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தார். இந்த கூட்டணியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எல்லாருக்கும் உள்ளது. அதிமுக தலைவர்களின் கருத்துகளால் குழப்பம் வர வேண்டாம். பாஜக கூட்டணியை உருவாக்கியுள்ளது. பாஜக மாநிலத் தலைவருக்கு அதிமுக தலைவர்கள் தரும் மரியாதை தனி நபருக்குத் தருவதல்ல. கட்சித் தலைவராக மரியாதை அளிக்க வேண்டும். கூட்டணியைப் பாதிக்கும் கருத்துகளைப் பேசாமல் இருப்பது நல்லது. தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன.

எனக்கு சூப்பர் ஸ்டார் நடிகர்கள் அல்ல. சூப்பர் ஸ்டார் ரஜினியா, விஜயா என நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. என்.எல்.சி. தொடர்பாக நீதிமன்ற உத்தரவிற்கு விவசாயிகளும், அந்நிர்வாகமும் ஒத்துழைப்பு தர வேண்டும். யாத்திரையில் பங்கேற்றுள்ள மகளிரணியை மிக மோசமாகச் சித்தரித்து வீடியோ பதிவிட்டுள்ளனர். இது குறித்து மாநிலம் முழுக்க காவல் நிலையங்களில் புகார் அளிக்க உள்ளோம். கருத்துச் சுதந்திரம் திமுக உடன் இருப்பவர்களுக்கு மட்டுமே இருப்பது போலச் செயல்படுகிறார்கள். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களைத் தனது படையை ஏவி விட்டுக் கேவலப்படுத்துகிறார்கள் எனத் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe