சுதந்திர தினத்தில் கொஞ்சி விளையாடிய கோவை மக்கள்

published 1 year ago

சுதந்திர தினத்தில் கொஞ்சி விளையாடிய கோவை மக்கள்

கோவை : கோவையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு  பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி பரிசுகளை அள்ளிச்சென்றுள்ளனர்.

மாறிவரும் காலகட்டத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்வதே பண்டிகையின் போதுதான்.

இந்த காலங்களில் கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தந்த ஊர்களில் உள்ள அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள், இளைஞர் மன்றங்கள் இத்தகைய போட்டிகளை நடத்துகின்றன.

இதனால் பொதுமக்கள் மத்தியில் நட்புணர்வும், மனச்சோர்வும் நீங்கி புத்துணர்வு பெறுகின்றனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் பல்வேறு வீதிகளிலும் இளைஞர் மன்றங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இதில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

அந்த வகையில் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நஞ்சப்பா நகரில் செயல்பட்டு வரும் இளைஞர் மன்றம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து சுதந்திர தின கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன. குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, நடனப்போட்டி, பாட்டுப் போட்டி சைக்கிள் பந்தயம், ஓட்டப் பந்தயம், ஆண்களுக்கான பானை உடைத்தல், லக்கி கார்னர், பெண்களுக்கான கோலப்போட்டி, லெமன் இன் தி ஸ்பூன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் நஞ்சப்பா நகர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

 குழந்தைகள் தேசப்பற்று பாடல் பாடியும், சுதந்திர போராட்ட வீரர்கள், தேயக்கொடி உள்ளிட்ட ஓவியங்கள் வரைந்தும், மேஜிக் ஷோ நடத்தியும் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

 மாலையில் நடைபெற்ற நடனப்போட்டியில் சினிமா பாடல்கள் உட்பட பல்வேறு பாடல்களுக்கு குழந்தைகள் அசத்தலாக நடனமாடினார். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் சிங்கை சிவா, ஆதி மகேஸ்வரி, இளைஞர் மன்ற தலைவர் பிரவீன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

கடந்த 20 ஆண்டுகளாக சுதந்திர தினத்தன்று இத்தகைய போட்டிகள் நடத்தி வருவதாகவும், இதன் மூலம் ஒவ்வொரு தெருக்களிலும் வாழும் மக்கள் மற்றொருவருடன் எளிதாக பழகி, மக்கள் மத்தியில் நட்புணர்வு நீடித்து வருவதாகவும் இளைஞர் மன்றத்தினர் கூறினர்.

இது போன்ற பண்டிகைகள் நமக்கு புத்துணர்வு தருவதோடு மட்டும் இல்லாமல் நாம் அனைவருடன் கூடி மகிழ ஒரு வாய்ப்பாகவும் உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe