தமிழ்நாட்டை புது தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவோம்- தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழாவில் முதல்வர் உரை

published 1 year ago

தமிழ்நாட்டை புது தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவோம்- தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழாவில் முதல்வர் உரை

கோவை: கோவை கொடிசியா அரங்கில் தமிழ்நாடு ஸ்டார்ட்-டப் திருவிழா நடைபெறுகிறது. இதில் 450 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 100 பெண் தொழில் முனைவோர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விழாவை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். பின்னர் இந்நிகழ்வில்  பேசிய அவர், "இந்த ஸ்டார்ட்-டப் திருவிழா அனைத்து மண்டலங்களிலும் நடத்தப்படும். புதிய கண்டுபிடிப்புகள் தான் உலகை ஆள்கின்றன. புதிய படைப்புகள் உருவாக்குவதில் கடைசி இடத்தில் இருந்து 3-ஆவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது.

இந்த 2 ஆண்டுகளில் மட்டும் 8 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட்-டப்களை முழுவீச்சான நிறுவனங்களாக்க முன்னேற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
28 மைக்ரோ கிளஸ்டர்களுக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 325.64 ஏக்கரில் புதிய தொழில் பேட்டை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 5 மண்டலமாக பிரிக்கபட்டு ஸ்டார்ட்-டப் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் புதிய ஸ்டார்ட்-ஆப் நிறுவனங்களை உருவாக்க அரசு நிதி வழங்கி வருகிறது. வருடா வருடம் நிதியின் தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. 5 இலட்சத்தில் தொடங்கிய இத்தொகை 15 இலட்சமாக உயர்ந்துள்ளது. 

மேலும் தொழில் உரிமை பெறுவதிலுள்ள சிக்கலை குறைத்துள்ளோம். புதிய இணையதளத்தைத் தொடங்கி உரிமங்களை அதிகாரிகள் வேகமாக வழங்கி வருகின்றனர். அடுக்குமாடி தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான கட்டிடங்களை உருவாக்கி வருகிறோம். இதற்கான பணிகள்  80% முடிந்துள்ளது. கோவையில் நாலு தொழிற்போட்டைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது." என்றார்.

இதைத்தொடர்ந்து, தமிழக தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பேசும் பொழுது, "இந்தியாவே வியந்து பார்க்கும் வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பதிவு 3 மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முதலிடத்தில் இருக்க கோவை முக்கிய பங்கு வகிக்கிறது. 

நாம் ஜவுளி, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ்-இல் முதல் இடத்தில் உள்ளோம். மின்சார வாகனத்தின் தலைநகரமாக உள்ளோம். 68% மின்சார இரு சக்கர வாகனங்கள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. மின்சார வாகன விற்பனையிலும் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. 

முதல்வரின் ஜப்பான் பயணம் மூலம் கை எழுத்திடப்பட்ட மருத்துவ சாதனம் தயாரிப்பு தொடர்பான நிறுவனப் பணிகளை ஒப்பந்தம் செய்யப்பட்ட 2 மாதங்களுக்குள் தொடங்கி விட்டோம். கோவையில் ‘தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளி’ தயாரிப்பு விரைவில் வளர போகிறது. மதுரையில் இதேபோல் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெறும். 1 trillion economy-யை நோக்கி தமிழகம் பயணம் செய்கிறது." எனத் தெரிவித்தார்.

இந்த விழாவில், காணொலி வாயிலாகவே சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  விழா பேருரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு மற்றும் தொழில் துறையை மேம்படுத்தயவர் கலைஞர். கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்பதால் இந்த நிகழ்வை அங்கே நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அதன்படி இந்த விழா சிறப்பாக நடைபெறுகின்றது.

அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தபடுகின்றன.
2021-இல் தமிழகத்தில் 2300 ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த இரு வருடங்களில் மூன்று மடங்காகி 6800 ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக  உயர்ந்து இருக்கின்றது.

இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வீதம் 10 கோடி வரை ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் மக்கள் அளித்த அதிகாரத்தை வனாளவியதாக நினைப்பதில்லை. திருக்குறள் கூறியது போல நெறிப்படுத்தி அதிகாரத்தை செயல்படுத்தி வருகின்றோம். தமிழகத்தை புத்தொழில்  நிறுவனங்களுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவோம்." என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த த. மோ. அன்பரசன், "இவ்விழாவில் 450-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பங்கு பெற்றுள்ளனர். இது பெருமையானது.  சிறு குறு நிறுவனங்கள் சார்பாக இந்த விழா நடைபெற்று வருகிறது. கோவையைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். 

திறமையான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 10 லட்சம் நிதி வழங்கியுள்ளோம். வருகின்ற காலங்களில் இது அதிகரிக்கும். 
தொழில் துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்க இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு பயிற்சிகள் ஏற்பாடு செய்து வருகிறோம்.  புதிய தொழில் முனைவர்களை உருவாக்கத் தொடர்ந்து முயற்சி செய்வோம். 

பாதிக்கப்பட்ட தொழில் முனைவர்களுக்கு உரிய உதவி செய்யப்படும். அவர்களுக்கான உதவி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் தொழிலை முன்னேற்ற அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்." என்றார்.

பின்னர் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "முதல்வர் மனதில் கோவைக்கு சிறப்பு இடம் உள்ளது. கோவைக்கு நிறைய திட்டங்கள் வரவுள்ளது. அதை முதல்வர் விரைவில் அறிவிக்கவுள்ளார். பல்வேறு ஐ டி நிறுவனங்களை கோவைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

விமான நிலைய விரிவாக்கப் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. பருத்தி விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம். மேலும் மிகப்பெரிய நிறுவங்கள் தமிழ்நாட்டை நோக்கி வரவுள்ளன. கோவையில் தொழில் நிறுவங்கள் வருவதற்கு நிலம் பிரச்சனையாக உள்ளது. அதையும் சரி செய்வதற்கான பணிகள் செய்யப்பட்டு வருகிறது." என்றார்.

முன்னதாக 3 கோடி ரூபாய் புத்தொழில் முனைவோருக்கு ஆதார நிதியுதவியாக அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க இயக்குநர் சிவராஜா ராமநாதன், தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயலாளர் அருண்ராய், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் நடிகர் சூரியும் கலந்து கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe