கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ஏழாவது மலர்கண்காட்சி மற்றும் 2025-ம் வருடத்திற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.வெ.கீதாலட்சுமி பேசுகையில்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஏழாவது மலர்கண்காட்சி பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 12-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக நடைபெற உள்ளதாகவும், இதில் பல்வேறு வகை மலர்களைக் கொண்டு கண்ணை கவரும் வகையில் பல நிறங்களில் மலர் வடிவங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
ரோஜா, ஆர்கிட், மல்லிகை, செண்டுமல்லி, சம்மங்கி, கனகாம்பரம், தாமரை, செவ்வந்தி மற்றும் பல்வேறு அரிய வகை மலர்களைக் கொண்டு வானவில், பட்டாம்பூச்சி உள்ளிட்ட பல்வேறு கலைநயம் மிக்க வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை குழந்தைகள், இளம் தலைமுறையினர், விவசாயிகள், விவசாய தொழில் முனைவோர், பொதுமக்கள் என அனைவரும் பார்வையிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இக்கண்காட்சியின் மூலம் பல்வேறு மலர் வகைகள் குறித்த தகவல்களை பெறுவதோடு, வீட்டு தோட்டம் மாடித்தோட்டம் குறித்த மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மூன்று நாட்கள் நடைபெற்ற கண்காட்சியை ஒரு லட்சம் பேர் பார்வையிட்டதாகவும், இந்த ஆண்டு தொடர் விடுமுறை காரணமாக ஐந்து நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியினை சுமார் 2 லட்சம் பேர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதற்காக பெரியவர்களுக்கு கட்டணம் நூறு ரூபாயாகவும், குழந்தைகளுக்கு ஐம்பது ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு குறித்து துணைவேந்தர் கீதாலட்சுமி எடுத்துரைத்தார்.
அப்போது பேசியவர், தமிழ்நாடு பல்கலைக்கழகம் சார்பில் உழவர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்படுவதாகவும், கடந்தாண்டு 24 ரகங்கள் வெளியிடப்பட்டது, இந்த ஆண்டு 11 தோட்டக்கலை பயிர்கள், ஏழு வேளாண் பயிர்கள் மற்றும் ஒரு காளான் பயிர் ஆகியன அறிமுகப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக மூன்று புதிய நெல் ரகங்கள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்துவதாகவும், இந்த புதிய பயிர் ரகங்களை விளைவித்து வேளாண் பெருமக்கள் பயனடைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 18 கல்லூரிகள், 42 ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு தட்பவெப்ப பகுதிகளுக்கேற்ப புதிய ரகங்கள் உருவாக்குவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த புதிய ரகங்கள் தமிழ்நாடு அரசின் மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டு குழுவால் அங்கீகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
வேளாண் பயிர்களில், நெல்லில் மூன்று ரகங்கள், (நடுத்தர குட்டை மற்றும் வறட்சியை தாங்கும் கோ 59, நடுத்தர சன்ன ரகங்கள் ஏடிடீ 56 மற்றும் ஏடிடீ 60), மக்காச்சோளம் கோஎச்(எம்) 12, இறவைக்கும் நெல் தரிசுக்கும் ஏற்ற உளுந்து வம்பன் 12, வறட்சியை தாங்கவல்ல நிலக்கடலை சிடிடீ 1 மற்றும் நடுத்தர உயரம் கொண்ட வீரிய ஒட்டு ஆமணக்கு ஒய்ஆர்சிஎச் 3 ஆகிய ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தோட்டக்கலைப்பயிர்களில் நான்கு காய்கறிப் பயிர்கள், தக்காளி கோ 4, வீரிய ஒட்டு வெண்டை கோ (எச்) 5, மிளகாய் கோ 5 மற்றும் சாம்பல் பூசணி பிஎல்ஆர் 1 வெளியிடப்பட்டுள்ளன. பழப்பயிர்களில், திருச்சிராப்பள்ளி, தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள வாழை காவேரி வாமன் உட்பட வெண்ணெய்ப்பழம் டிகேடி 2 மற்றும் எலுமிச்சை எஸ்என்கேஎல் 1 வெளியிடப்பட்டுள்ளன. ஒரு மலர் பயிர் (அரளி தோவாளை 1), ஒரு தென்னை (ஏஎல்ஆர் 4), ஒரு நறுமணப்பயிர் (ஜாதிக்காய் பிபிஐ 1), ஒரு மூலிகைப்பயிர் சிறுகுறிஞ்சான் கோ 1 வெளியிடப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, சிப்பிக்காளானில் கேகேஎம் 1 என்ற ரகமும் வெளியிடப்பட்டுள்ளது.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!